Testimonies - 2015 November Retreat (Sisters)
சாட்சியங்கள் - 2015 நவம்பர் தியானம் (அருட்சகோதரிகள்)
அருட்சகோதரி. மேரி ஃப்ளோரா – இங்கிலாந்து , நவம்பர் 19, 2015:

எல்லோரையும் போல நானும் இயல்பாகதான் நடமாடி கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு கடந்த 1992, 2002 மற்றும் 2007 ம் ஆண்டுகளில் 3 ஆபரேஷன் நடந்தது. 2014 ஜுலையிலிருந்து என் இடது பக்கம் பலவீனமாகி விட்டது. நடக்க முடியவில்லை. பார்க்காத டாக்டர் இல்லை. ஆஸ்பத்திரி இல்லை. செய்யாத பரிசோதனை இல்லை. எல்லாம் நார்மல் என்று தான் கூறுகிறார்கள். இங்கிலாந்தில் தான் இப்படி என்றால் கடந்த ஆகஸ்ட் 26 இந்தியா வந்தேன். இங்கும் பிரபலமான ஆஸ்பத்திரிகளில் மருத்துவம் பார்த்தேன். சிறிதளவு கூட முன்னேற்றம் இல்லை. பிறகு சித்த மருத்துவம் செய்ய சொன்னர்கள். அதிலும் எந்த பலனும் இல்லை. பிறகு ஆயுர்வேதா மருத்துவமும் முயற்சி செய்தோம். 20 நாட்கள் சிகிச்சை. துளி கூட பயன் இல்லை. முழுவதுமாக மனம் தளர்ந்து போனேன். ஆனால் இதற்கு முன்னே எனக்கு இங்கு தியானத்திற்க்கு புக் பண்ணியிருந்தார்கள்.

இங்கு வரும் போது மிகுந்த நம்பிக்கையுடன் வந்தேன். கடவுள் மட்டுமே எனக்கு சுகம் கொடுக்க முடியும் என்று உணர்ந்தேன். நல்ல பாவ அறிக்கை செய்தேன். கவுன்சிலிங் நிகழ்விலும் கடவுள் என்னை தொடுவதாக சகோதரி கூறினார்கள். எனக்காக இங்குள்ள ஒவ்வொருவரும் வேண்டுவதை கண்டு இறைவனுக்கு கண்ணீரோடு நன்றி கூறினேன். இப்போது நடந்த இந்த அபிஷேக ஆராதனை நிகழ்விலே என்னுள் ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்தது. அப்பொழுதே என்னால் எழுந்து நடக்க முடியும் என்று தோன்றியது. இடையிடையே எழுந்து பார்த்தேன்.தற்போது உங்கள் முன்னால் நடந்தும் பார்தேன். (வீல் சேரை விட்டு விட்டு எழுந்து நடக்கிறார்) என்னை இயேசாண்டவர் தொட்டு இருக்கிறார். வெகுவிரைவில் வந்து மேடையில் சாட்சி சொல்வேன். என் இயேசாண்டவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

அருட்சகோதரி ஆக்டேவியா – கோவை , நவம்பர் 19, 2015:

கடந்த ஜுலை மாதம் 16 நாள் ஆண்டவர் என்னை சாவின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்தார். ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு அதிலிருந்து காப்பாற்றப்பட்டேன். அப்போதிலிருந்து ஒரு வலியானது நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் எப்பொழுதும் ஒரு வித பயமும் இருந்து கொண்டே இருந்தது. என்னை பார்ப்பவர்கள் எல்லாம் என்னிடம் கேட்பார்கள். ஏன் எப்போதுமே ஒரே சோகமாய் இருக்கிறாய்? என்று.

இந்த தியானத்திற்க்கு வந்த 2ம் நாள், ஆராதனை நடக்கும்போது என் உடலில் மின்சாரம் போன்று ஏதோ ஓன்று பாய்ந்தது. அதன் பிறகு என் நெஞ்சில் இருந்த வலியானது முற்றிலும் நீங்கிவிட்டது. அதன் பிறகிலிருந்து நான் மிகவும் நார்மலாக இருக்கிறேன். என்னை தியானத்திற்க்கு அழைத்து குணப்படுத்திய யேசாண்டவருக்கு நன்றி.

அருட்சகோதரி ஆன்னி – பெங்களுர் , நவம்பர் 19, 2015:

8 மாதங்களுக்கு முன்பு எனக்கு முதுகில் ஒரு மேஜர் சர்ஜரி நடந்தது. அதன் பிறகிலிருந்து என்னால் நடக்கவே முடியவில்லை. கடுமையான வலி. சுப்பீரியர் கூட கேட்டார்கள் உன்னால் தியானத்திற்க்கு செல்ல முடியுமா என்று. நான் செல்கிறேன் என்று வந்தேன். எனது முதுகுவலி குணமாகி விட்டது. எனது தோள்பட்டை எப்போதுமே ஸ்டிஃப் ஆக இருக்கும். இப்போது அதுவும் குணமாகி விட்டது. விடாது தலைவலி இருக்கும். அதுவும் குணமாகி விட்டது.

மிகவும் மன பாரத்தோடு வந்தேன். மனமும் லேசாகி விட்டது. ஆராதனை நிகழ்விலே என் முகத்தில் யாரோ மெல்லிய துணியால் வருடி சென்ற அனுபவம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். இறைவனுக்கு ஸ்தோத்திரம்.

அருட்சகோதரி. சலேத் மேரி – தாராபுரம் , நவம்பர் 19, 2015:

நான் 3 முறை கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஆனால் இடுப்பு வலி மட்டும் நிற்கவேயில்லை. ஆராதனை நிகழ்விலே அருட்தந்தை அவர்கள் இடுப்பு வலியுடன் இருக்கும் ஒரு சகோதரியை கடவுள் தொடுகிறார் என்று சொல்லும் போதே என்னுள்ளும் ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வு. உடனே மயங்கி அப்படியே சரிந்து விட்டேன். சற்று நேரத்தில் எழுந்த பொழுது எனக்கிருந்த வலி எங்கே போனது என்றே தெரியவில்லை.

எனக்கு பக்கத்தில் இருந்த அருட்சகோதரியிடம் இதை கூறினேன். அவர் இதை கண்டிப்பாக சாட்சியம் கூறவேண்டும் என்று சொன்னார். மேலும் எனக்கு இடைவிடாத ஒற்றை தலைவலி இருந்து கொண்டே இருந்தது. தியானத்திற்க்கு வந்தபோது கூட தலைவலியுடன் தான் வந்தேன். மூன்றாம் நாளிலிருந்து என் தலைவலி எங்கே போனது என்றே தெரியவில்லை. என்னில் அதிசயத்தை நிகழ்த்திய யேசாண்டவருக்கு நன்றி.

அருட்சகோதரி வெய்ரா – வேலூர் , நவம்பர் 19, 2015:

எனக்கு தமிழ் தியானத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வெகு நாளாக ஆசை. ஃபாதர் ஸ்டீஃபன் அவர்களுடைய தியானத்தில் கலந்து கொள்ள சொல்லி என் சகோதரிகள் சொல்லியிருந்தார்கள். இந்த தியானத்திற்கிற்க்காக மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை உள்ளது. எனக்கு தைராய்டு பிரச்னை அதிகமாகி 1987ல் கழுத்தில் ஆபரேஷன் செய்திருக்கிறேன். திடீரென்று பசியெடுத்து சாப்பிடவில்லையென்றால் உடனே மயக்கமாகி விடுவேன். உடலில் சக்தியே இருக்காது.

ஐ.வி. இஞ்ஜெக்சன் போடவேண்டும். இரவில் திடீரென்று அறையில் இறந்து போய்விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் நினைத்து பயந்து கொண்டேயிருந்தேன். இந்த 5 நாட்களும் நான் எல்லோரையும் போல தான் சாப்பிட்டேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக சாப்பிட்டேன். நன்றாக தூங்கினேன். எனக்கு நல்ல மன தைரியத்தை கடவுள் கொடுத்திருக்கிறார். கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே.