Testimonies - 2015 September Retreat (Sisters)

சாட்சியங்கள் - 2015 செப்டம்பர் தியானம் (அருட்சகோதரிகள்)
அருட்சகோதரி. பிரியங்கா - திருவள்ளுர், ஞாயிறு செப்டம்பர் 25, 2015:

நான் ப்ளஸ் 2 படிக்கும் போதிலிருந்து எனக்கு தைராய்டு பிரச்னை ஆரம்பமானது. எனது தொண்டையில் ஒரு கட்டி இருக்கும். கடைசிவரை மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் டாக்டரின் அறிவுரை. எனக்கு இங்கு நடந்த ஆராதனையிலே அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள் தைராய்டு பிரச்னை உள்ள ஒரு சகோதரியை கடவுள் தொடுகிறார் என்று சொன்னார்கள். அப்போதே என் தைராய்டு கட்டி கரைந்துவிட்டது.

என்னை ஆண்டவர் தைராய்டு பிரச்னையில் இருந்து குணமாக்கிவிட்டார். யேசு ஆண்டவருக்கு நன்றி.

அருட்சகோதரி இருதயமேரி - பெங்களுர், ஞாயிறு செப்டம்பர் 25, 2015:

இந்த தியானத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே எனது முதுகிலிருந்து கால் வரை தாங்கமுடியாத வலியால் அவதிப்பட்டேன். என்னால் உட்காரவே முடியாது. ஆனாலும் எனக்கு தியானத்தில் கலந்து கொள்ள ஆசை. நானும் இங்கு வந்தவுடன் அருட்தந்தை ஸ்டீபன் அவர்களை சந்தித்து வலியை பற்றிக் கூறினேன். அவர்களும் தியானம் முடிந்து செல்லுமுன் முழு சுகம் கிடைக்கும் என்றார்கள். உள்மனக் காயம் ஆராதனை அன்று, என் முதுகுவலியானது முற்றிலும் நீங்கியது. அதன் பிறகிலிருந்து இன்றுவரை எந்த வலியும் இல்லை. மேலும் ஒற்றை தலைவலியினால் 20 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தேன். தலைவலி வந்துவிட்டால் எதுவும் செய்யமுடியாது. வலி தாங்கமுடியாமல் பூண்டை அரைத்துப் போட்டு, என் நெற்றியே கருப்பாகிவிட்டது. அப்படிப்பட்ட எனக்கு என் தலைவலியும் முற்றிலும் நீங்கியுள்ளது. மேலும் முட்டிவலியினால் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் இங்கு கடந்த 2 நாட்களாக முழங்காலில்தான் இருந்தேன். அந்த வலியில் இருந்தும் விடுதலை கொடுத்த ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி.

அருட்சகோதரி விமலா - வேளாங்கண்ணி, ஞாயிறு செப்டம்பர் 25, 2015:

கடந்த 3 மாதங்களாக தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டு வந்தேன். இரவு முழுவதும் தூக்கமே வராது. அதிகாலை 3-4 மணிக்கு தான் தூக்கம் வரும். அதன் பிறகு என்னால் 5 மணிக்கெல்லாம் எழமுடியாது. ஆனால் தர்மபுரிக்கு வந்ததிலிருந்து இரவு சாப்பிட்டுவிட்டு படுப்பதுதான் தெரியும். சரியாக காலை 5 மணிக்குத்தான் கண் விழித்தேன். எனக்கே ஆச்சர்யமான ஆச்சரியம். அத்தோடு கை கால் முட்டி வலியினாலும் கஷ்டப்பட்டேன். அதனாலேயே முழந்தாள் படியிடமாட்டேன். இங்கு வந்தவுடன், முதல் 2 நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு எனக்கு எந்த வலியும் இல்லை. ஒரே வாரத்தில் எனக்கு இத்தனை அதிசயங்களை செய்த ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி.

அருட்சகோதரி ஜோதி - சென்னை, ஞாயிறு செப்டம்பர் 25, 2015:

கடந்த 10 வருடங்களாக தூக்கமில்லாமல் ஒற்றைத் தலைவலியினால் அவதிப்பட்டு வருகிறேன். எனக்கு தலைவலி வந்துவிட்டால் நிறைய மாத்திரைகள் சாப்பிடுவேன். அத்தோடு ஒரு கல் வைத்திருக்கிறேன். அந்தக் கல்லைத் தூக்கி தலையில் வைத்தால்தான் சற்று வலி குறைந்ததுபோல் தோன்றும். இப்படிதான் நான் கடந்த 10 வருடங்களாக செய்துகொண்டு இருக்கிறேன். இங்கு தியானத்திற்கு வந்த முதல் நாள் மட்டும் லேசான தலைவலி இருந்தது. 2ஆம் நாளிலிருந்து தலைவலி இல்லை. நான் கவுன்சிலிங் சென்றபோது அந்த சகோதரி என் தலையில் கைவைத்து ஜெபித்துவிட்டு, தலைவலியினால் நான் அவதிப்பட்டு வருவதைக் கூறி, கடவுள் ஆராதனை நிகழ்வில் என்னை குணப்படுத்தப்போவதாக தனக்கு வெளிப்படுத்துவதாகக் கூறினார். அவர் சொன்னது போலவே, ஆராதனைக்குப் பிறகு எனக்கு எந்த வலியும் இல்லை. கடவுள் என்னைத் தொட்டு சுகப்படுத்தியுள்ளார். இறைவனுக்கு நன்றி.

அருட்சகோதரி எலிசபெத் - தூத்துக்குடி, ஞாயிறு செப்டம்பர் 25, 2015:

கடந்த 4 வருடங்களாக, எப்பொழுதும் எனக்குக் கண்ணிலிருந்து நீர் வடிந்து கொண்டேயிருக்கும். கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டேயிருப்பேன். அருட்தந்தை அவர்கள் 2ஆம் நாள் ஆராதனையில் கண் சம்பந்தப்பட்ட நோயிலிருந்து ஒரு சகோதரியை குணப்படுத்துகிறார் என்று கூறினார்கள். அது நான்தான். தந்தை அவர்கள் சொன்ன நேரத்தில் இருந்து, இன்றுவரை, எனக்கு கண்ணிலிருந்து நீர் வடிவது முற்றிலுமாக நின்று விட்டது. கடவுளுக்கு ஸ்தோத்திரம்.

அருட்சகோதரி மேரி ரான்சம் - சென்னை, ஞாயிறு செப்டம்பர் 25, 2015:

சென்ற முறை நான் இங்கு தியானத்திற்கு வந்தபோது எனக்கு ஆண்டவர் பல வெளிப்பாடுகளைக் கொடுத்தார். எண்ணற்ற சுகம் கொடுத்தார். அப்போது நான் ஆண்டவரிடம் மன்றாடி வேண்டினேன். "யேசுவே, என் சபையை சேர்ந்த எல்லா சகோதரிகளுக்கும் இந்த சோகத்தூர் தியான அனுபவம் கிடைக்க நீரே வழி வகை செய்ய வேண்டும்" என்று ஒவ்வொரு நாளும் உருக்கமாக வேண்டிக்கொண்டு இருந்தேன். என் பிரார்த்தனையை யேசாண்டவர் நிச்சயம் கேட்டிருக்க வேண்டும். எங்கள் தலைமையகத்தையே கடவுள் தொட்டார். அதிசயம். ஒவ்வொரு மாதமும் எங்கள் காணிக்கை அன்னை அருட் சகோதரிகள் 100 பேர் வந்து கலந்து கொள்ள ஏற்பாடு செய்துகொடுத்தார் என்பதே ஒரு மிகப் பெரிய சாட்சியம்தான். எங்கள் சபையை சேர்ந்த எல்லா அருட்சகோதரிகளும் இந்த தியானத்தில் கலந்து கொண்டு, இறை ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே முதல் பணி என்பதை கடவுள் அவர்களுக்கு உணர்த்துவார் என்று நம்புகிறேன். அத்துடன் கடந்த 3 நாட்களாக என் காலில் நரம்பு இழுத்துக்கொண்டது. நடக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அருட்தந்தை ஸ்டீபன் அவர்களிடம் சொன்னபொது கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து வேண்டிக் கொள்ள சொன்னார். நானும் உடனே ஜெபித்தேன். அப்பொழுதிலிருந்து அந்த வலியும் என்னை விட்டு அகன்றது. கோடி ஸ்தோத்திரம் ஐயா.