Testimonies - 2015 August Retreat-3 (Sisters)

சாட்சியங்கள் - 2015 ஆகஸ்ட் தியானம்-3 (அருட்சகோதரிகள்)
சகோதரி. ரீத்தா - , ஆகஸ்ட் 28, 2015:

கடந்த 3 வருடங்களாக முதுகுவலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்தேன். இரவு படுத்து, காலையில் என்னால் எழவே முடியாது. தாங்கமுடியாத வலியால் ஒவ்வொரு நாளும் அவதிப்பட்டு வந்தேன். எந்த சிகிச்சையும் பலனலிக்கவில்லை. அப்போதுதான் மதர் சொன்னார்கள், “நீ தியானத்தில் கலந்துகொள்; கடவுள் உன்னை குணப்படுத்துவார்” என்று. நம்பிக்கையோடு வந்தேன்.

இரண்டாம் நாள் ஆராதனையில் தந்தை அவர்கள் முதுகுவலியால் அவதியுறும் சகோதரியை ஆண்டவர் குணப்படுத்துகிறார்” என்று சொன்னார்கள். அப்போது அது நானாகத்தான் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அப்போதிருந்தே எனக்கு வலியில்லை. பிறகு நான் அருட்தந்தையிடம் கேட்டபோது, “உங்களுக்கு கடவுள் குணப்படுத்திவிட்டார்” என்றார். அன்றிலிருந்து இந்த 7ஆம் நாள் வரை எனக்கு முதுகில் வலியே இல்லை. கடவுளுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

சகோதரி. மரிய லில்லி - திருத்துறைப்பூண்டி, ஆகஸ்ட் 28, 2015:

கடந்த 4 வருடங்களாக எனக்கு மார்பகத்தில் ஒரு கட்டி இருந்தது. இதுபோல் இருந்தால் உடனே சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால் நான் கடவுளிடம், “இந்த உடல் நீங்கள் படைத்தது. இதற்கு எது வந்தாலும் நீங்கள்தான் குணப்படுத்தவேண்டும்” என்று மட்டும்தான் வேண்டிக்கொள்வேன். எந்த சிகிச்சையும் செய்யவில்லை. மேலும் நான் என்னுடைய அலுவலகப்பணியில் ஒவ்வொரு நாளும் நான் எத்தனை முறை தும்முவேன், எத்தனை கைகுட்டைகள் நனையும் என்று எனக்கே தெரியாது. அவ்வளவு அவதிப்பட்டு வந்தேன்.

ஆனால் இங்கு வந்ததில் இருந்து எந்த கைகுட்டையையும் பயன்படுத்தவே இல்லை. ஏனென்றால் எனக்கு இருந்த தும்மலோ நீர் வடிதலோ இன்றுவரை இல்லை. 2ஆம் நாள் ஆராதனையில் அருட்தந்தை அவர்கள் கட்டிகளை கடவுள் கரைக்கிறார் என்று கூறினார்கள். அன்றிலிருந்து எனக்கு அந்த கட்டி இருந்த இடமே தெரியவில்லை. என்ன அற்புதம். என்னை சுகப்படுத்திய கடவுளுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

சகோதரி. ஜெஸிந்தா - சென்னை, ஆகஸ்ட் 28, 2015:

கடந்த 2 வருடங்களாக எனக்கு தேவ அழைத்தலில் ஒரு தடுமாற்றம். எனக்கு உண்மையிலேயே தேவ அழைத்தல் இருக்கிறதா என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. வீட்டுக்கு சென்றுவிடலாம் என்றுகூட முடிவு செய்துவிட்டேன். சுப்பீரியர் மதரிடம்கூட தெரிவித்துவிட்டேன். அவர்கள்தான் “தர்மபுரி தியானத்துக்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் நான் உன்னை அனுப்புகிறேன். நீ சென்று வா. மனதுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்” என்றார்கள். நானும் வந்தேன். அருட்தந்தை அவர்களை சந்தித்துப் பேசியபோது தெளிவாகச் சொன்னார்கள், எனக்கு உள்ள தேவ அழைத்தலைப் பற்றி. பிறகு கவுன்சிலிங் நிகழ்விலும் அது உறுதி செய்யப்பட்டது. நான் இப்போது மிகுந்த மனத்தெளிவுடன் இருக்கிறேன், கடவுளுக்கு ஊழியம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என்று. கடவுளுக்கு நன்றி.

சகோதரி. அந்தோணியம்மாள் - சென்னை, ஆகஸ்ட் 28, 2015:

எனக்கு சளித் தொந்தரவினால் பச்சை தண்ணீரை பயன்படுத்துவதில்லை. எதற்குமே சுடு தண்ணீர்தான் ஆனால் இந்த தியானத்துக்கு வந்த நாளில் இருந்து இந்த 7 நாட்களாக நான் சுடு தண்ணீரே பயன்படுத்தவில்லை. வெறும் குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்; குடிக்கிறேன். மிகவும் சுறுசுறுப்பாக உள்ளேன். இரவில் என்னால் தூங்கவே முடியாது. தூக்கமும் வராது. ஆனால் கடந்த 6 இரவுகளாக எவ்வளவு சுகமாக தூங்கினேன் என்று எனக்குத்தான் தெரியும். எனக்கு சுகமளித்த கடவுளுக்கு கோடி நன்றி.

சகோதரி. மரிய சுசித்ரா, ஆகஸ்ட் 28, 2015:

நான் எப்போதுமே ஆண்டவரின் பிரசன்னத்துக்காகத்தான் பிரார்த்தனை செய்வேன். இந்த தியானத்துக்கு வந்த பிறகு “ஆண்டவரே, உமது பிரசன்னத்தை எனக்குக் காட்டும்” என்றுதான் வேண்டினேன். நான் இங்கு வந்ததில் இருந்து ஒரு வித்தியாசமான நறுமணத் தைலத்தின் வாசம் எனக்கு இந்த ஆசிரம வளாகம் முழுவதுமே கிடைத்தது. கோவிலில் ஆரம்பித்து, சாப்பிடும் இடம், நாம் தங்கியிருக்கும் அறை, மாதா கெபி மற்றும் இந்த 22 ஏக்கர் நிலத்தில் நாம் ஜெபமாலை சொல்லிக்கொண்டே செல்லும் ஒவ்வொரு இடத்திலும் அந்த தைலத்தின் நறுமணத்தை அனுபவித்து மகிழ்ந்தேன். அது ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமே.

மேலும் ஆராதனை நேரங்களிலே நற்கருணையில் நான் ஆண்டவரின் விழிகளைக் கண்டேன். எல்லா நாட்களிலும் எனக்கு அதே அனுபவம்தான். அதாவது நமது கடவுள் காண்கின்ற கடவுள் என்பதை வெளிப்படுத்தினார். எனக்கு கவுன்சிலிங் நிகழ்வில்கூட கேட்டார்கள், ஆராதனையில் ஏதாவது வெளிப்பாடு கிடைத்ததா என்று”. கடவுளின் பிரசன்னத்தை நான் முழுவதுமாக அனுபவிக்கத் துணைபுரிந்த இறைவனுக்கு கோடி நன்றி.

சகோதரி. க்றிஸ்டி - திண்டுக்கல், ஆகஸ்ட் 28, 2015:

கடந்த 22 ஆண்டுகளாக இருந்த தோல் அலர்ஜி அரிப்பு வியாதியிலிருந்து கடவுள் எனக்கு அதிசயமான முறையில் குணமளித்துள்ளார். என்னாலேயே நம்ப முடியாத நிலை. கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

சகோதரி. ஜோஸ்ஃபின் - செங்குடி, ஆகஸ்ட் 28, 2015:

இந்த தியானத்தில் கலந்து கொண்டதால் கடவுள் எனக்கு செய்த 3 புதுமைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என்னைப் பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும். பொதுவாக நான் கழுத்து காலர் போடுவேன். ஏனெனில் கழுத்து வலி. உடல் சற்று அசைவு கொடுத்தாலும் வலி அதிகமாகிவிடும். ஆனால் கடந்த 7 நாட்களாக நான் காலர் போடவில்லை. இறைப் புகழ்ச்சியில் நான் தான் வேகமாக கைதட்டினேன். எனக்கு எந்த கழுத்து வலியும் இல்லை. கடவுளுக்கு நன்றி.

அடுத்து எனக்கு முழந்தாள்படி இட முடியாது. முட்டியில் கட்டிகள் உள்ளன. ஆனால் கடவுள்மேல் உள்ள நம்பிக்கையில் துணிந்து படியிட்டேன். திருப்பலியிலும், ஆராதனையிலும் நாம் எவ்வளவு நேரம் முழந்தாள் படியிடுகிறோமோ அவ்வளவு நேரமும் இருந்தேன். எனக்கு எதுவுமே நடக்கவில்லை.

கடைசியாக எனக்கு மனதில் நிறைய கேள்விகள் சந்தேகங்கள்; எல்லாம் நம் விவிலியத்தைப் பற்றி. அதிகமாகப் படித்ததின் விளைவுகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆண்டவர் என் மனதில் என்னென்ன சந்தேகங்கள் இருந்தனவோ, அத்தனைக்கும் சம்மட்டியால் அடித்ததுபோல அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் மூலம் எனக்கு விடை கொடுத்து, என் மனதை அவ்வளவு லேசாக மாற்றிவிட்டார். நான் முழுவதுமாக கடவுளின் பிரசன்னத்தை இந்த ஆலயத்தில் உணருகிறேன். கடவுள் நம் கண்முன்பாகவே உலவிக் கொண்டிருப்பதை நன்றாக உணருகிறேன். கோடி ஸ்தோத்திரம் ஐயா.