Testimonies - 2015 August Retreat-1 (Sisters)

சாட்சியங்கள் - 2015 ஆகஸ்ட் மாத தியானம்-1 (அருட்சகோதரிகள்)
சகோதரி ஆலிஸ் - சேலம், ஆகஸ்ட் 8, 2015:

நான் +1, +2 பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரிய அருட்சகோதரி. எனக்கு இங்கு வந்தபிறகு விவிலியத்தைப் பற்றி ஏராளமான அறிவைக் கொடுத்து எனக்கு ஞானத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. மேலும் எனக்கு சைனஸ் தொந்தரவினால் காலை எழுந்ததில் இருந்து 2 கைத்துண்டுகள் நனைந்துவிடும் அளவுக்கு சளி வெளியேறிக் கொண்டேயிருக்கும். எனக்கு இங்கு வந்ததிலிருந்து அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஏசுவே உமக்கு நன்றி. மேலும் எனக்கு அலர்ஜி நோயினால் அரித்துக் கொண்டேயிருக்கும். ஆனால் தியானத்தில் கலந்து கொண்டதிலிருந்து எனக்கு அலர்ஜியை குணப்படுத்திய மருத்துவருக்கெல்லாம் மருத்துவராகிய இயேசாண்டவருக்கு கோடி நன்றி. எனக்கு கண்பார்வையில் குறைபாடு உண்டு. மேலும் என்னுடைய கண்ணாடியை நான் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். டாக்டரோ பவர் கூடிவிட்டது, அதனால் மாற்றவேண்டும் என்பார். நான் 5 கண்ணாடிகள் வைத்திருக்கிறேன். ஆனால் நான் இந்த தியானத்தில் எந்த கண்ணாடியும் இல்லாமல் விவிலியத்தைப் படித்தேன்.

சகோதரி ஜெஸ்ஸி - நாமக்கல், ஆகஸ்ட் 8, 2015:

கடந்த 2 ஆண்டுகளாக என்னால் முழந்தாள் படியிட முடியாதபடி கடுமையான முட்டிவலி. மேலும் என்னால் கீழே தரையில் உட்கார முடியாது. பல வருடங்களாக நான் கீழே அமர்ந்ததேயில்லை. இந்த 2 குறைபாடுகளையும் எனக்கு கடவுள் குணப்படுத்தியிருக்கிறார். மணிக்கணக்கில் நான் கீழேயேதான் உட்கார்ந்திருந்தேன். ஆராதனை சார்ந்த எல்லா நிகழ்வுகளிலும் நான் வெகுநேரம் முட்டியில் அமர்ந்துதான் ஜெபித்தேன். எனக்கு கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிகுந்த மனபாரத்தோடு இந்த தியானத்துக்கு வந்தேன். கடவுள் என்னை மிக லேசாக மாற்றிவிட்டார். கோடி ஸ்தோத்திரம் இயேசுவே.

சகோதரி மரிய தெரஸ் - சேலம், ஆகஸ்ட் 8, 2015:

கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து நான் முட்டி போட்டதில்லை. 32 ஆண்டுகளுக்குப் பிறகு என்னை முழந்தாள்படியிட வைத்து அற்புதம் நிகழ்த்திய ஆண்டவருக்கு கோடி ஸ்தோத்திரம். மேலும் என்னால் தனியாளாக நிற்கக்கூட முடியாது. எதையாவது பிடித்துக்கொண்டுதான் நிற்கமுடியும். ஆனால் இந்த ஆலயத்தில் என்னால் தனியாளாக நிற்க மற்றும் ஆடிப்பாட வைத்து என்னை மாற்றி இறைவன் அற்புதம் நிகழ்த்தியுள்ளார்.

சகோதரி ஏஞ்சலா மேரி - சென்னை, ஆகஸ்ட் 8, 2015:

வெளிநாடு செல்வதற்காக எல்லா வேலைகளும் முடிந்து இடையில் விசாவில் ஒரு சிறு தடங்கல் ஏற்பட்டதால் எனக்கு இந்த தியானத்தில் கலந்து கொள்வதற்கான பாக்கியம் கிடைத்தது. இந்த தியானத்திற்காக நான் மிகவும் ஏக்கத்துடன் இருந்தேன். என்னை கலந்து கொள்ள வைத்த கடவுளுக்கு நன்றி. கைதட்டி, ஆடிப்பாடி கடவுளை ஸ்துதிப்பது என்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனால் இங்கு வந்தபின்தான் அதன் மகிமையை உணர்ந்தேன். இறைபுகழ்ச்சிக்கு நான் என்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்துவிட்டு அதற்கான முக்கியத்துவத்தை முதலாவதாக்க் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். என்னுடைய வாழ்க்கையிலே இந்த தியானம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னுள் நிறைய மாற்றங்களை கடவுள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இனிமேலிருந்து கடவுளுக்காகவே வாழ வேண்டும் என்ற வெறி ஏற்பட்டுள்ளது. நிச்சயம் செய்வேன். கடவுளுக்கு நன்றி.

சகோதரி ஷோபிகா, குண்டூர் - ஆந்திரா, ஆகஸ்ட் 8, 2015:

கடந்த 12 ஆண்டுகளாகவே முதுகுவலியினால் அவதிப்பட்டு வந்தேன். இறைப்புகழ்ச்சி சமயத்தில் ஆடிப்பாடுவதால் வலி இன்னும் அதிகமாகுமே என்ற அயம். 2ஆம் நாள் வலி மிகவும் அதிகமாக இருந்தது. அருட்தந்தையிடம் சொன்னேன். குணமடையுமுன் வலி அதிகரிக்கும் என்று சொன்னார்கள். கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தேன். 3ஆம் நாளிலிருந்து இன்றுவரை எனக்கு எந்த வலியுமில்லை. கடவுளுக்கு நன்றி. மேலும் எனக்கு ஜீரணக்கோளாறு இருப்பதால் உணவில் காரம், எண்ணெய், மாமிசம் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதில்லை. மறந்து சாப்பிட்டுவிட்டால் உடனே வாந்தி வந்துவிடும். ஆனால் இங்கு வந்தபின் எனக்கு இந்த பிரச்னை குணமடைய வேண்டி கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து மீன், கோழி என்று ஒரு கட்டு கட்டினேன். எல்லோரையும் போல, எல்லா உணவுகளையும் சாப்பிட்டேன். ஆனாலும் எனக்கு வாந்தி வரவேயில்லை. என்னே கடவுளின் வல்லமை. மேலும் என்னால் கீழேயும் உட்கார முடியாது. சேரிலோ, சோஃபாவிலோதான் உட்காரமுடியும். ஆனால் இந்த தியானம் முழுவதும் நான் கீழேதான் உட்கார்ந்திருந்தேன். அதிலும் கடவுள் என்னை சுகப்படுத்தியுள்ளார். எங்கள் சார்லஸ் பொரோமியோ சபையை சார்ந்த அருட்சகோதரிகள் அனைவரும் இந்த தியானத்தில் கலந்துகொண்டு இறையாசீரை அள்ளிச் செல்லவேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான எல்லா முயற்சிகளையும் நான் செய்வேன். இயேசுவுக்கு கோடி நன்றி.

சகோதரி மோட்ச மேரி - சென்னை, ஆகஸ்ட் 8, 2015:

நான் இந்த தியான மையத்தில் கலந்து கொள்வது 2ஆவது முறை. இங்கு வருவதால் உடல் சுகம் கிடைக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. அதை நான் சென்ற முறையே அனுபவித்தேன். இந்த முறை எனக்கு ஆன்ம சுகம் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டுதான் நான் வந்தேன். “உம்முடைய பரிசுத்த ஆவியானவரால் என்னை அபிஷேகம் செய்யும்” என்று பிடிவாதமாக வேண்டினேன். அப்போது மைத்துளி போன்று என்னை கடவுள் அபிஷேகம் செய்த்தை நான் நன்கு உணர்ந்தேன். என்னால் இதுபோன்று பிறர் முன்னிலையில் பேசத் தெரியாது. நான் இப்போது சாட்சியம் கூறுகிறேன் என்றால் அதுவே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமே. எனக்கு முதுகுவலி, முட்டிவலி என்று பல பிரச்னைகள். அனைத்து வலிகளிலிருந்தும் எனக்கு இயேசைய்யா விடுதலை கொடுத்திருக்கிறார். எனக்கு சாப்பிடுவதில் துளியும் விருப்பம் இருக்காது. கடமைக்கென்று சாப்பிட்டு வைப்பேன். ஆனால் இங்கு வந்ததில் இருந்து எனக்கு சரியான பசியெடுக்கிறது. எல்லா உணவையும் நான் ருசித்து சாப்பிடுகிறேன்.