Testimonies - 2015 May Retreat-3 (Sisters)

சாட்சியங்கள் - 2015 மே மாத தியானம்-3 (அருட்சகோதரிகள்)
அருட்சகோதரி ஆன்னி - தூத்துக்குடி, ஞாயிறு மே 24, 2015:

நான் என்னுடைய 25 வருட அர்ப்பண வாழ்வை முடித்துவிட்டேன். அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்களை, நான் முத்துப்பேட்டையில் இருக்கும்போது பார்த்தேன். திருப்பலி முடிந்து அருட்தந்தையை சந்தித்தபோது, ஒரு வினாடி என்னைப் பார்த்துவிட்டு, என் மனதில் உள்ளவைகளை அப்படியே புட்டு புட்டு வைத்தார். என்னால் நம்பவே முடியவில்லை; இது எப்படி என்று வியந்தேன். அதன்பிறகு நான் இந்த தியானத்துக்கு கலந்துகொள்ள வந்தபோதுகூட, நான் வேறு ஒரு மன நிலையில் இருந்தேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. ஒரு அருட்சகோதரியாக இருந்துகொண்டு சொல்லக்கூடாத வார்த்தைகள்தான் இவை. ஆனால் உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும்.

என் தேவனாகிய ஆண்டவர் என்னை இந்த தியானத்துக்கு அழைத்துவந்து, எனக்கு அருட்தந்தை மூலமாக சொல்லிக்கொடுத்தது, “என் உயிர் மூச்சு உள்ளவரை நான் இயேசுவுக்காக வாழவேண்டும்" என்பதே. என் கடைசி மூச்சு உள்ள வரை, நான் என் கடவுளுக்காக வாழ்வேன் என்று உறுதியுடன் உள்ளேன். என்னை மாற்றிய கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.

அருட்சகோதரி ஷிபான்யா - திருவண்ணாமலை, ஞாயிறு மே 24, 2015:

நான் இந்த தியானத்துக்கு வருவதற்காக கிளம்பியபோது ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் மிகவும் மன-துக்கத்துடனும் மனவேதனையுடனும் வந்தேன். என்னைக் கட்டுப்படுத்த, என்னுடன் வந்த அருட்சகோதரிகள் மிகவும் பாடுபட்டனர். நான் அருட்சகோதரியானது, என் பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனாலேயே அவர்கள் என்னுடன் பேசுவதில்லை. இந்த சூழ்நிலையில், நான் இந்த தியானத்தை முடித்துவிட்டு, பெட்டி படுக்கைகளுடன் வீட்டுக்கு சென்றுவிடுவது என்று முடிவெடுத்துதான் இங்கு வந்தேன். ஆனால் உள்மனக்காயங்கள் நிகழ்வில், கடவுள் எனக்கு மன்னிக்கும் வரத்தை அளித்தார். அதனால் எனக்கு எதிராக இருந்தவர்கள் அனைவரையும் நான் மன்னிக்குமாறு கடவுள் செய்தார். நானும் அவர்களை முழுமனதோடு மன்னித்துவிட்டேன்.

அவருக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த என்னை மேலும் ஆசீர்வதித்து, ஒரு புது உத்வேகத்துடன், வல்லமையோடு துறவற வாழ்க்கையைத் தொடர, என்னை மாற்றிய கடவுளுக்கு, கோடான கோடி ஸ்தோத்திரமும் புகழும் உரித்தாகுக.

அருட்சகோதரி ஜிம்சி - திருவண்ணாமலை, ஞாயிறு மே 24, 2015:

நான் இங்கு வரும்போது ஆன்மீக வாழ்க்கையில் மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்தேன். “இந்த தியானத்தால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப்போகிறது?” என்ற மனநிலையில்கூட இருந்தேன். ஆனால், தியானம் ஆரம்பித்த 2ஆம் நாளே, அருட்தந்தை அவர்கள் நம்மை பாவசங்கீர்த்தனத்துக்காக தயார்படுத்த ஆரம்பித்தது முதல், நான் என்னில் நிறைய மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். மிக அருமையான ஒரு பாவசங்கீர்த்தனம் செய்ய உதவிய அருட்தந்தைக்கு நன்றிகள் பல. அது முதல் நான் மிக லேசாக இருப்பதை உணர ஆரம்பித்தேன். எனக்குப் பரவசப்பேச்சு வரத்தைக் கொடுத்து ஆசீர்வதித்த கடவுளுக்கும், என்னையே மாற்றி கடவுளுக்கு இன்னும் அதிகமாக ஊழியம் புரியவேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்கிக்கொடுத்த அருட்தந்தைக்கும் நன்றிகள். இயேசுவே போற்றி.

அருட்சகோதரி இருதயராணி - கோவளம், ஞாயிறு மே 24, 2015:

சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் நின்ற என்னை, இன்று நான் இங்கு நின்று பேசிக்கொண்டிருக்க செய்த அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் மூலமாக கடவுள் செய்கிற அற்புதங்களை நினைத்தாலே என் உடல் பதறுகிறது. எனக்கு சிறுநீரகத்தில் ஓட்டை விழுந்துவிட்டது என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. வாரத்துக்கு 2 முறை நான் டயாலிசிஸ் செய்தே ஆகவேண்டிய கட்டாயம். அத்துடன் மாத்திரைகள் மருந்துகள் என்று இருந்த நான், அருட்சகோதரி ஒருவரின் மூலமாக அருட்தந்தை அவர்களைப் பார்க்க கடந்த 20ஆம்தேதி அன்று இங்கு வந்தேன். அன்று நான் அழுது, என் வாழ்நாளிலேயே செய்யாத ஒரு முழு பாவசங்கீர்த்தனத்தை செய்தேன். அருட்தந்தை அவர்கள் என்னை ஆசீர்வதித்து அனுப்பினார். அன்று முதல் நான் எந்த மருந்து மாத்திரையையும் சாப்பிடுவதில்லை. வல்லமையோடு ஜெபிக்கிறேன். திருவிவிலியத்தை முழுமையாக படிக்கிறேன். அதிக நேரம் இறைவார்த்தைகளைப் பற்றி சிந்திக்கிறேன்.

கடந்த 6 நாட்களாக நான் எல்லோரையும் போலவே, எல்லா ஆராதனை நிகழ்வுகளிலும் மகிழ்ச்சியோடு பங்கேற்கிறேன். உடலில் எந்த சோர்வோ பெலகீனங்களோ இல்லை. இறைவன் என்னை சுகமாக்கிக்கொண்டு இருக்கிறார் என்பதில் எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை. இயேசு நாமம் வாழ்க.

அருட்சகோதரி கிளமெண்சியா - திருச்சி, ஞாயிறு மே 24, 2015:

என்னுடைய பக்திமார்க்கத்தில் இடையில் சில காலங்களாக சிறு தொய்வு ஏற்பட்டது. அதிகம் ஜெபிக்க முடியாமலும், அதற்காக நேரம் ஒதுக்கமுடியாமலும், மனதை ஒருநிலைப்படுத்த முடியாமலும் இருந்த சூழ்நிலையில், அருட்சகோதரி ஒருவர் அழைத்ததை ஏற்று, கடைசிநேரத்தில் முடிவு எடுத்து, இந்த தெய்வீக தியானத்தில் கலந்துகொண்டேன். அபிஷேக ஆராதனை நிகழ்வின்போது, அருட்தந்தையர்கள் தலையில் கை வைத்து ஜெபித்தபோது, தெய்வீக வல்லமை என்னுள் இறங்கியதை நான் மனதார உணர்ந்தேன். அந்த வல்லமையின் அபிஷேகம் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. மாதா என் அருகில் நின்று பேசியதையும், ஆண்டவர் என் காதுகளில் பேசிய ஆறுதல் வார்த்தைகளையும் அபிஷேகத்தோடு உணர்ந்தேன்.

நான் கடந்த 2010லிருந்து சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய்களால் அவதியுறுகிறேன். தினமும் மாத்திரைகளை சாப்பிடவில்லையென்றால் என்னால் நிற்கமுடியாது. மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன். அதுபோல் சோதனையாக நான் தியானத்துக்கு வந்தபோது இரத்தத்தில் சர்க்கரை அளவு 320க்கும் மேல் இருந்தது. நான் சாப்பிடவேண்டிய மாத்திரைகளோ ஒவ்வொன்றுதான் இருந்தன. நான் இங்கிருந்த ஊழியக்காரர் ஒருவரிடம், “எனக்கு 2 மாத்திரைகளையும் வாங்கித்தர முடியுமா?” என்று கேட்டேன். அவரோ, “அதெல்லாம் தேவையில்லை சகோதரி. இறைவன் பார்த்துக்கொள்வார். எத்தனையோ பேர் ஒவ்வொரு தியானத்திலும் குணமடைந்து செல்கிறார்கள்” என்றார்; இருந்தாலும் நான் கேட்டதற்காக மாத்திரைகளையும் எனக்கு வாங்கிக் கொடுத்தார்.

எனக்கு என்னவோ அவர் கூறியதில் உள்ள அர்த்தம் புரிந்தது. “நாமும் ஏன் நம்பிக்கையோடு இருக்கக்கூடாது?” என்று நினைத்து, வல்லமையோடு ஜெபித்தேன். கடந்த 6 நாட்களாக ஒரு மாத்திரைகூட சாப்பிடவில்லை. எனக்கு எந்தவிதமான தலைசுற்றலோ, மயக்கமோ இந்த 6 நாட்களும் ஏற்படவில்லை. கடவுள் வல்லமையோடு என்னை குணமாக்கிவிட்டார் என்று நான் முழுமனத்தோடு நம்புகிறேன். அல்லேலூயா.