Testimonies - 2019 January 28 - February 1 Retreat (Laity)

சாட்சியங்கள் - 2019 ஜனவரி 28 - ஃபிப்ரவரி 1 தியானம் (பொதுமக்கள்)
அருட்செல்வி – பெங்களூர், ஜனவரி 28 - ஃபிப்ரவரி 1, 2019:

எனக்கு கடுமையான தலைவலி, சிவியர் கேஸ்ட்ரிக் பிரச்னை உள்ளது. காரமான எந்த உணவையும் எடுக்க மாட்டேன். டீ, காஃபி, பால், புலால் உணவு வகைகளை எடுக்க மாட்டேன். இதில் எதை எடுத்தாலும் உடனே வயிறு வலிக்க ஆரம்பித்து விடும். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை. ஆண்டவர் என்னை இந்த தியானத்தின் வழியாய் குணப்படுத்துவார் என்று. முதல் நாளே ஃபாதர் அவர்கள் சொன்னார்கள். இங்கு வழங்கப்படும் எல்லா உணவுகளையும் நீங்கள் சாப்பிடலாம் என்று. நானும் குழம்பு சாதம், டீ, காபி, பிரியாணி, முட்டை, மீன் குழம்பு, வறுவல் என்று என்னையே நான் சோதித்துப் பார்க்கும் வகையில் சாப்பிட்டேன். என்ன ஆச்சர்யம். ஒரு சிறு வலியோ, வயிற்று தொந்தரவோ, தலைவலியோ இந்த 4 நாட்களாக இல்லை. எனக்கு இப்போது கூட வார்த்தேயே வரவில்லை. ஆண்டவர் யேசு செய்த அற்புதம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. என்னை இந்த தியானத்திற்கு வரவழைத்து சுகம் கொடுத்த யேசு ராஜாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

அந்தோணி – தென்காசி, ஜனவரி 28 - ஃபிப்ரவரி 1, 2019:

கடந்த 9 ஆண்டுகளாகவே எனக்கு உடல் அலர்ஜி வியாதி. அதாவது உடலில் எல்லா பாகங்களும் அரித்துக் கொண்டேயிருக்கும். எனது கைகள் சும்மாவே இருக்காது. எங்காவது ஒரு பகுதியில் சொறிந்து கொண்டுதான் இருக்கும். தூங்கும்போது கூட என்னை அறியாமலேயே சொறிந்து கொண்டுதான் இருப்பேன். எல்லா வைத்தியமும் செய்து பார்த்து விட்டோம். ஒன்றும் சுகப்படவில்லை. இந்த தியானத்திற்காக பதிவு செய்தபோதே எனக்கு ஒரு தைரியம் வந்தது. இந்த இடத்தில் ஆண்டவர் என்னை சுகப்படுத்தப் போகிறார் என்று எனது மனது சொல்லிக்கொண்டேயிருந்தது. நானும் எக்காரணம் கொண்டும், அரித்தாலும் சொறியக் கூடாது என்று ஒரு முடிவு எடுத்திருந்தேன். செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து எனது கைகளை நான் அல்லேலூயா சொல்வதற்கும், கை தட்டுவதற்கும், ஆண்டவரை உயர்த்திப் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தினேனே ஒழிய வேறு எதற்குமே இல்லை. இந்த 4 நாட்களாகவே, எனக்கு அரிப்பு என்ற உணர்வே வரவில்லை. 9 ஆண்டு கால வியாதியின் போரட்டத்திற்கு ஆண்டவர் யேசு இந்த தியானத்தின் வழியாக, இந்த பூமியிலே எனக்கு விடுதலை கொடுத்துள்ளார். அதிசய தேவனுக்கு கோடி நன்றி.

மரிய சாந்தி – கந்திகுப்பம், ஜனவரி 28 - ஃபிப்ரவரி 1, 2019:

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக எனக்கு கடுமையான இடுப்பு வலி. வலியென்றால் அப்படி ஒரு வலி. தாங்கவே முடியாது. குறிப்பாக இரவில் கடுமையாக இருக்கும். தூங்கவே முடியாது. அழுது கொண்டே உட்கார்ந்து இருப்பேன். தியானத்தில் எப்படி இருக்க போகிறோம் என்ற கவலை இருந்தாலும், ஆண்டவர் யேசு என்னை சுகப்படுத்தி விடுவார் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. கவுன்சிலிங் சென்ற போது கவுன்சிலர் அவர்கள் சொன்னார்கள், எனது இடுப்பு வலியை ஆண்டவர் முற்றிலுமாக நீக்கி போடுகிறார் என்று. அந்த கணத்திலிருந்தே எனக்கு சிறு வலி கூட இல்லை. 2 நாட்களாக எல்லாம் மறந்து நன்றாக தூங்கினேன். இது போன்று தூக்கம் தூங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன. யேசாண்டவர் நாமம் வாழ்க. யேசுவே போற்றி.

செபாஸ்டின் - கோவை, ஜனவரி 28 - ஃபிப்ரவரி 1, 2019:

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு ஏஞ்சியோ (இருதய ஆபரேஷன்) செய்யப்பட்டது. வேகமாக நடக்கமுடியாது. நெஞ்சுப்பகுதியிலும், வயிற்றிலும் வலி இருந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் தியானத்திற்கு வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேயிருந்தேன். நிறைவான மனநிறைவை ஆண்டவர் இந்த தியானத்தின் வழியாய் கொடுத்துள்ளார். உடல் பெலத்தையும் தந்துள்ளார். தெய்வீக பிரசன்னத்தை உணர வைத்த ஆண்டவர் யேசுவுக்கு கோடி ஸ்தோத்திரம்.

நவீன் ஆண்ட்ரூஸ் – தென்காசி, ஜனவரி 28 - ஃபிப்ரவரி 1, 2019:

நான் இங்கு வரும்போது இடுப்பில் பெல்ட் போட்டுக்கொண்டு தான் வந்தேன். முதுகு தண்டில் எனக்கு பிரச்னை உள்ளது. பெல்ட் போடாமல் நடக்க முடியாது. செவ்வாயன்று பாவசங்கீர்த்தனம் முடிந்து ஆராதனையில், இடுப்பு வலியால் அவதியுறும் சகோதரனை ஆண்டவர் தொடுகிறார் என்று அருட்தந்தை சொன்னவுடனேயே, எனது இடுப்பு வலி பிரச்னை நீங்கியதை நன்றாகவே உணர்ந்தேன். அன்று இரவு அறைக்கு சென்ற பின் பெல்ட்டை கழற்றி வைத்து விட்டேன். இன்றோடு 3 நாட்கள் ஆகிறது. ஒரு பிரச்னையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக பெல்ட் இல்லாமல் நடக்கிறேன். ஏன் முன்பை விடவும் வேகமாகவே நடக்கிறேன். எந்த வலியோ, பிடிப்போ இல்லை. தேவனாகிய யேசப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம், கோடி நன்றி.

செல்வம் - தர்மபுரி, ஜனவரி 28 - ஃபிப்ரவரி 1, 2019:

கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு முதுகுவலி, கால்வலி. ஒரு வைத்தியமும் எனக்கு சரியாகவில்லை. நேற்று இரவு உள்மனக்காயம் ஆராதனை முடிந்ததிலிருந்து எனக்கு உடலில் எந்த வலியும் இல்லை. மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. யேசுவுக்கு நன்றி. யேசு நாமம் வாழ்க.