Testimonies - 2015 September Retreat (Laity)

சாட்சியங்கள் - 2015 செப்டம்பர் மாத தியானம் (பொதுமக்கள்)
அந்தோணி ஜெரால்டு - திருப்பூர், வெள்ளி செப்டம்பர் 18, 2015:

நான் 2 கிட்னியும் செயலிழந்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸ் செய்வதன் மூலமாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன். அருட்தந்தை ஸ்டீபன் அவர்களை அண்மையில் கோவையில் எங்கள் பக்கத்து பங்கான, சூலூரில் சந்தித்து எனது உடல் பிரச்னை குறித்து சொன்னேன். அவர்கள் என்னை தியானத்தில் கலந்து கொள்ள சொன்னர்கள். நானும் எனது தாயாரும் உடனே பதிவு செய்தோம். டாக்டர்கள் “5 நாட்கள் எல்லாம் டயாலிசிஸ் செய்யாமல் உன்னால் உயிர் பிழைக்க முடியாது” என்றார்கள். என்ன ஆனாலும் ஆகட்டும் என்று கடவுளை மட்டுமே நம்பி இந்த தியானத்திற்கு வந்தேன்.

எனது இதயத்துடிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். அதாவது 15 இருக்க வேண்டியது எனக்கு 75 ஆக இருக்கிறது. டாக்டரே “நீ எப்படி உயிரோடு இருக்கிறாய்” என்று கேட்பார். நான் இரவில் 2 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். மேலும் மலச்சிக்கல் பிரச்சினையும் உள்ளது. இங்கு வந்த முதல் நாளே அருட்தந்தை அவர்கள் என் தலையில் கைவைத்து ஜெபித்தார். அன்று இரவு வெகு நாட்களுக்கு பிறகு நன்றாக தூங்கினேன். அன்று இரவு 4-5 முறை டாய்லெட் சென்றேன்.

கிளமென்ட் பிரதர் இன்று வகுப்பெடுக்கும் போது இடையில் ஆன்டனி என்ற சகோதரனை கிட்னி பிரச்னையில் இருந்து கடவுள் விடுவிக்கிறார் என்றார். நான் இங்கு வந்த இந்த 4 நாட்களாக டயாலிசிஸ் இல்லாமல்தான் உள்ளேன். கடவுள் என்னை தொட்டு ஆசீர்வத்திருக்கிறார் என்றே முழுமையாக நம்புகிறேன். மீண்டும் முற்றிலும் குணம் பெற்று வந்து சாட்சியம் கூறுவேன். இறைவனுக்கு நன்றி.

அந்தோணி சேகர் - கோயமுத்தூர், வெள்ளி செப்டம்பர் 18, 2015:

நான் ஒரு ஆசிரியர். எங்களது செயிண்ட் மைக்கேல் ஸ்கூலில் இருந்து இந்த தியானத்தில் கலந்துகொண்ட என் உடன் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் கூறித்தான் நான் இங்கு வந்தேன். கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு அலர்ஜி நோய் உள்ளது. என் வீட்டை விட்டு வெளியே போய் எங்கே சாப்பிட்டாலும், அது உறவினர்கள் வீடாக இருந்தாலும் சரி, ஹோட்டலாக இருந்தாலும் சரி, சாப்பிட்ட உடனேயே என் இரு கண்களும் வீங்கி மூடிவிடும். என் உதடுகள் பெரிதாக வீங்கிவிடும். பஸ்ஸிலே, ரயிலிலோ பயணம் செய்தால் பின்புறம் இரண்டும் தடித்து போய் வலிக்க, அரிக்க, ஆரம்பித்து வீங்கிவிடும். ஆனால் இங்கு வந்து இந்த 5 நாட்களும் நான் இங்கு நாற்காலியில் அமர்ந்துள்ளேன். தரையில் அமர்கிறேன். எனக்கு எந்த அலர்ஜியோ, அரிப்போ வலியோ இல்லை. கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

ஆரோக்யராஜ் - சருகனி - சிவகங்கை, வெள்ளி செப்டம்பர் 18, 2015:

நான் ஒரு ஆசிரியர். அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள் எங்கள் பங்கிற்கு 2 முறை வந்துள்ளார்கள். எங்கள் பங்கு மக்களை அருட்தந்தை வருவதற்கு முன், வந்தபின் என பிரிக்கலாம். அருட்தந்தையின் அருள் வார்த்தைகளை கேட்டபின் எங்கள் பங்கில் எண்ணற்ற மனமாற்றங்கள் நிகழ்திருக்கின்றன. எனக்கு கடந்த 15 ஆண்டுகளக பைல்ஸ் நோய் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், லேசர் அறுவை சிகிச்சையும் செய்தேன். ஒன்றும் பயன் இல்லை. ரத்தபோக்கு அதிகமாக இருக்கும். இங்கு வந்த பின் கோழிக்கறி குருமா கொடுத்தார்கள். அதை சாப்பிட்டால் எனக்கு ரத்த போக்கு இன்னும் அதிகமாகி விடும். ஆனால் கடவுள் மேல் பாரத்தை போட்டு, ஒரு கப்புக்கு இரண்டாக சாப்பிட்டேன். அதிசயம். மறுநாள் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. வலியும் இல்லை. கடந்த 2 நாட்களாக மிகவும் நார்மலாக உள்ளது. மேலும் எனக்கு காதில் எப்பொழுதும் ஒரு இரைச்சல் இருந்து கொண்டே இருக்கும். கவுன்சிலிங் நிகழ்வில் சகோதரர் அவர்கள் காது இரைச்சலை கடவுள் குணப்படுத்துவதாகக் கூறினார். அதிலிருந்து என் காது இரைச்சலும் முற்றிலும் நீங்கிவிட்டது. நான் இந்த ஆசிரமத்தை மண்ணகத்தில் உள்ள ஒரு விண்ணகமாகவே கருதுகிறேன். எண்ணற்ற அதிசயங்களும், அற்புதங்களும் நிகழும் இந்த பூமியில் இறைவன் வாசம் செய்கிறார். இறைவனுக்குக் கோடான கோடி நன்றி.

ரீட்டா - கோயமுத்தூர், வெள்ளி செப்டம்பர் 18, 2015:

நான் வெகு நாட்களாக முதுகுவலியினால் அவதிப்பட்டு வந்தேன். எங்கேயும் போக முடியாது. உட்கார முடியாது. உட்கார்ந்தால் எழமுடியாது. கவுன்சிலிங் நடக்கும்போது சகோதரியிடம் கூறினேன். கடவுள் குணப்படுத்துகிறார் என்று ஜெபித்துவிட்டு கூறினார். அந்த வினாடியில் இருந்து எனக்கு முதுகுவலியே இல்லை. மேலும் எனக்கு இரவில் தூக்கமே வராது. அருட்தந்தை ஸ்டீபன் அவர்களிடம் சொல்லி அழுதேன். அவரும் தலையில் கைவைத்து ஜெபித்தார். அன்று இரவிலிருந்து சாப்பிட்டு படுப்பதுதான் தெரியும். காலையில் எல்லோரும் கிளம்பும் சத்தம் கேட்டுத்தான் கண்விழித்தேன்.

எனக்கு சுகம் கொடுத்த இறைமகனுக்குக் கோடான கோடி நன்றி.

சேவியர் - அரியலூர், வெள்ளி செப்டம்பர் 18, 2015:

கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலையை அடைந்து, பின்பு அதில் இருந்து மீண்டு படுக்கையிலே அல்லது உட்கார்ந்த நிலையிலே மட்டும் இருந்து வந்த சேவியர், கடைசிநாள் அபிஷேக ஆராதனை நிகழ்வில் அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள், கடவுள் தொட்டு சுகப்படுத்தியுள்ளதாக கூறியபின் முதலில் எழுவதற்கே மிகவும் யோசித்து பின் தியானத்தில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களின் பலத்த கரவொலிக்கு பின் கடவுள் திடம் கொடுத்து ஆலயத்தின் பிற்பகுதியில் இருந்து தானே நடந்து வந்து பீடத்தின் அருகில் வரை வந்து அருட்தந்தையிடம் அருளாசி பெறும் காட்சிகள்.