Testimonies - 2015 August Retreat-2 (Laity)

சாட்சியங்கள் - 2015 ஆகஸ்ட் மாத தியானம்-2 (பொதுமக்கள்)
ஜோசஃப் பெர்லின் - சேலம், வெள்ளி ஆகஸ்ட் 14, 2015:

எனக்கு 41 வயதாகிறது. இந்த தியானத்தின் 5 நாட்களில் ஆண்டவர் எனக்கு உணர்த்தியது, என் வாழ்நாளின் 41 ஆண்டுகளையும் நான் வீணடித்துவிட்டேன் என்பதுதான். அதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். இனி ஒரு வினாடிப் பொழுதுகூட வீணடிக்காமல் என் வாழ்க்கை முழுவதையும் ஆண்டவரைப் பற்றி தேடுவதிலும், ஆண்டவரை அறிந்து கொள்வதிலுமே என் குடும்பத்தாரோடு சேர்ந்து செலவிடவேண்டும் என்பதில் உறுதியாய் உள்ளேன். நான், என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இந்த தியானத்திற்கு வந்தேன். அவர்களுடன் கலந்து பேசி, இனி எங்கள் வாழ்வில் கடவுள் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற முடிவுடன், எந்த செயலுமே கடவுளை சார்ந்திருக்கவேண்டும் என்ற முடிவு செய்துள்ளேன். இப்படிப்பட்ட மனமாற்றத்தை ஏற்படுத்திய கடவுளுக்கு கோடி நன்றி.

ஜான் - சேலம், வெள்ளி ஆகஸ்ட் 14, 2015:

கடந்த 12 ஆண்டுகளாக தீய சக்திகளின் பிடியில் சிக்கி மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் எங்கள் சேலம் பங்கு கோவிலுக்கு வந்திருந்தபோது, அவரை சந்தித்து என் பிரச்னையைக் கூறினேன். அப்போது தந்தை அவர்கள் தியானத்தில் கலந்துகொள்ளுமாறு கூறினார்கள். அருட்தந்தை அவர்களின் வேண்டுதலினாலும், கவுன்சிலிங் கொடுத்த சகோதரராலும், நான் நலமடைந்துள்ளேன். என்னைப் பிடித்திருந்த தீய சக்தி என்னை விட்டு விலகுவதை நான் நன்றாக உணர்ந்தேன்.

என்னை குணமாக்கிய ஆண்டவருக்கும், அருட்தந்தையருக்கும், கோடான கோடி நன்றி.

மெர்வின் - சென்னை, வெள்ளி ஆகஸ்ட் 14, 2015:

நான் பரிசுத்த ஆவியானவரின் அனுபவத்தைப் பெறவே இந்த தியானத்தில் கலந்துகொண்டேன். மேலும் என்னால் கீழே உட்கார முடியாது. மிகுந்த வலி ஏற்படும். வலியில் இருந்து விடுதலை பெறவும் இங்கு வந்தேன். செவ்வாய் ஆராதனை நிகழ்வில் எல்லாரும் கைதட்டி ஆராதனை செய்யும்போது, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை என் அருகில் உணர்ந்தேன். உடனே நான், “பரிசுத்த ஆவியானவரே, நீர் என்னருகில் இருப்பதை உணர்கிறேன். என்னுள்ளே வாரும், வாரும் என்று தொடர்ந்து வேண்டிக்கொண்டே துதித்துக் கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் நான் கைதட்டுவதை என்னாலேயே நிறுத்த முடியவில்லை. அவ்வளவு வேகமாக தட்டிக்கொண்டே இருந்தேன். என் கைகள் வலிக்க ஆரம்பித்தது. அப்போது நான் “பரிசுத்த ஆவியானவரே நன்றி, என்னை ஆட்கொண்டதற்கு நன்றி” என்று வேண்டிய பிறகுதான், நான் கைதட்டுவதை என்னாலேயே நிறுத்த முடிந்தது.

மேலும் என்னால் கீழே அமர்வதற்கு இருந்த பிரச்னையும் தீர்ந்தது. கடந்த 3 நாட்களாக நன்றாக கீழே அமர்ந்து எழுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் கிடைத்ததற்கு கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

வின்சென்ட் ராஜ் - குடவாசல் திருவாரூர், வெள்ளி ஆகஸ்ட் 14, 2015:

நான் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி நடந்த கார்மேல் மாதா திருவிழாவிற்கு வந்திருந்தபோது மந்திரிக்கப்பட்ட உப்பும், எண்ணெய்யும் வாங்கி சென்றேன். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று எங்கள் மூலங்குடி பங்கு கோவிலுக்கு சென்று வந்தபிறகு, சென்னையிலிருந்து வந்திருந்த என் மாமனார், தான் சாப்பிட வேண்டிய மாத்திரைகளுக்கு பதிலாக, தவறுதலாக 4 தூக்க மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார். சற்று நேரத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் ஆனதற்குப் பிறகுதான் எல்லாருக்கும் தெரிந்து, அழ ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு மாதா உடனே ஒரு யோசனையை கொடுத்தார். நான் இங்கிருந்து வாங்கிச் சென்றிருந்த மந்திரித்த உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து வாயில் ஊற்றினேன்.

என்ன அதிசயம். தண்ணீர் தொண்டைக்குள் சென்றதும், என் மாமனார் எழுந்து உட்கார்ந்துவிட்டார். அன்று என் மாமனாரைப் பிழைக்கவைத்த கடவுளுக்கு நன்றி.

மேலும் என்னால் முழங்கால் போடவே முடியாது. பாவசங்கீர்த்தனம் செய்தபோதுகூட நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுதான் செய்தேன். ஆனால் அதிசயமாக என்னை அறியாமலேயே இன்று காலையில் இருந்து முழங்கால் படியிடுகிறேன். கடவுள் என்னில் செய்த அதிசயங்களுக்கு கோடான கோடி நன்றி.

சேவியர் - சருகணி சிவகங்கை, வெள்ளி ஆகஸ்ட் 14, 2015:

நான் தியானத்திற்கு வரும்போது மிகுந்த மனபாரத்துடனும், மனக்கலக்கத்துடனும் வந்தேன். எல்லாம் வல்ல இறைவன் என் கஷ்டங்கள், பாரங்கள் அனைத்தையும் இந்த தியானத்தின் மூலமாக நீக்கி எல்லாவற்றிற்கும் ஒரு விடை கொடுத்திருக்கிறார். கடவுளுக்கு ஸ்தோத்திரம்.

ப்ரியா - வேளாங்கண்ணி, வெள்ளி ஆகஸ்ட் 14, 2015:

நான் ஒரு ஆசிரியையாக பணிபுரிகிறேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று ஒருநாள் என்னால் சாப்பிட முடியவில்லை. தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை. வாயில் எதை வைத்தாலும் உடனே வாந்தி எடுத்துவிடுவேன். பல டாக்டர்களை பார்த்துவிட்டோம். ஒன்றும் முடியவில்லை. டாக்டர்களுக்கும் ஏன் இப்படி ஏற்படுகிறது என்று தெரியவில்லை. பிறகு என்னை, மதர் தெரசா கான்வென்ட் சிஸ்டர் ஒருவர்தான், “ஸ்டீஃபன் ஃபாதரிடம் உன்னை அழைத்து செல்கிறேன். நீ சரியாகிவிடுவாய்” என்று என்னை வேளாங்கண்ணியில் இருந்து தர்மபுரிக்கு அழைத்து வந்தார்கள். இங்கு ஸ்டீஃபன் ஃபாதரைப் பார்த்து என் பிரச்னையைக் கூறினோம். ஃபாதர் அவர்கள் எனக்காக ஜெபித்து, 33 முறை விசுவாசப் பிரமாண ஜெபம் சொல்லுமாறு கூறினார். பின் “தைரியமாகப் போ. கடவுள் உன்மீது இரக்கம் காட்டுவார்” என்று சொன்னார். எனக்கு எந்த ஜெபமும் தெரியாது; ஏனென்றால் நான் ஒரு இந்து சகோதரி. எனவே நான் இங்கு ஒரு ஜெப புத்தகம் வாங்கி அதிலிருந்து படித்து சொன்னேன்.

திரும்பி செல்லும்போது சேலம் பஸ் ஸ்டாண்டில் பசிக்கிறது என்று சொல்லி ஒரு தோசை வாங்கி சாப்பிட்டேன். ஆனாலும் எங்கே பஸ்ஸிலேயே வாந்தி எடுத்துவிடுவேனோ என்று பயத்தோடுதான் சாப்பிட்டேன். சிஸ்டர்தான் எதுவும் ஆகாது என்று நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். 2 மாதமாக வாயில் எதை வைத்தாலும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்த நான், ஃபாதரைப் பார்த்துவிட்டு சென்ற நாளிலிருந்து இன்றுவரை நன்றாக சாப்பிடுகிறேன். தினமும் நிறைய தண்ணீர் குடிக்கிறேன். இந்த சாட்சியம் சொல்வதற்காகவே லீவு போட்டுவிட்டு இந்த தியானத்துக்கு வந்துள்ளேன். என்னில் இரக்கம் கொண்ட இயேசு ஆண்டவர்க்கும், அன்னை மரியாவுக்கும் கோடான கோடி நன்றிகள்.