Testimonies - 2015 July Retreat (Lay People)

சாட்சியங்கள் - 2015 ஜூலை மாத தியானம் (பொதுமக்கள்)
அருட்தந்தை ஜான்சன், பங்குத் தந்தை - ராதாபுரம் - திருநெல்வேலி, ஜூலை 16, 2015:

அருட்தந்தையர்களுக்கென்று தியானம் வருடாவருடம் நடக்கும். எனக்கு தர்மபுரி கார்மேல் ஆசிரமத்தில் வந்து ஒரு 4 - 5 நாள் தங்கி தியானித்துவிட்டு செல்ல ஆசை. அதுதான் வந்தேன். அதே சமயத்தில் பொதுமக்களுக்கான தியானமும் நடந்ததால் நாமே அதில் ஏன் பங்கேற்கக் கூடாது என்று நினைத்தேன். உங்களுடன் நானும் தியானத்தில் பங்குகொண்டேன்.

உண்மையிலேயே கடவுளின் பிரசன்னத்தை இந்த ஆசிரம வளாகம் முழுமையிலும் என்னால் உணர முடிந்தது. ஒருசில காட்சிகள் மூலமாகவும் கடவுள் எனக்கு உணர்த்தித் தந்தார். எத்தனை பேர் நீங்கள் சாட்சியம் சொல்கிறீர்கள்! இதுவே இறைபிரசன்னத்திற்கு ஒரு சாட்சியம்தான்.

கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக உள்ள ஒவ்வொரு கருத்துக்கும், அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் அவ்வளவு ஆணித்தரமாக விளக்கம் கொடுத்தார்கள். என்னைப் போன்ற அருட்தந்தையர்களுக்கே பலமூட்டும் டானிக் போன்று இருந்தன அவரது விளக்கங்கள். பைபிள் மட்டுமே நமது வாழ்வின் ஆதாரமாக இருக்கவேண்டும் என்பதையும் நன்கு உணரவைத்தது. தியானத்துக்கு வந்திருக்கிற இந்த 147 பேரும் எத்தனையோ பாரத்தோடும் தாகத்தோடும் வந்திருப்பீர்கள். அவர்கள் அனைவரது பாரமும் தாகமும் நிச்சயம் தீர்த்திருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இயேசுவுக்கே புகழ்.

சகோதரி ஏஞ்சல் - தஞ்சாவூர், ஜூலை 16, 2015:

நான் இந்த தியானத்தில் கலந்து கொண்டதே கடவுளின் புதுமைதான். பலமுறை என் சகோதரி தியானத்துக்கு வரச் சொன்னபோதெல்லாம் பெரிதாக நான் எடுத்துக்கொண்டதில்லை. ஏற்கனவே பதிவு செய்த ஒரு தம்பதியர் வரமுடியாததால் இந்த தியானத்திற்கு வர எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நான் எப்போதுமே என் பிள்ளைகளுக்காகவே வாழவேண்டும் என்ற சிந்தனையிலேயே இருப்பேன். ஆனால் கடந்த 4 நாட்களாக கேட்ட ஒவ்வொரு வகுப்பும், திருப்பலிகளும், ஆராதனைகளும் இனிமேல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக மட்டுமே என்னுடைய வாழ்நாள் முழுவதையும் ஒப்புக்கொடுக்க உறுதி கொண்டுள்ளேன். என்னை இந்த அளவுக்கு மாற்றிய கடவுளுக்கு நன்றி.

நான் எத்தனையோ மனபாரத்தோடு இந்த சோகத்தூருக்கு வந்தேன். என்னுடைய சோகங்கள் அனைத்திற்கும் விடைகொடுத்த சோகத்தூர் கார்மேல் அன்னைக்கு நன்றி.

மேலும் நான் வீட்டில் இரவில் தூங்கவே மாட்டேன். எல்லாரும் படுத்தபின் புத்தகம் படிப்பேன்; சமையலறையில் ஏதாவது செய்து கொண்டு இருப்பேன்; அல்லது ஹாலில் டி.வி பார்ப்பேன். ஆனால் கடந்த 3 நாட்களாக, இரவு 10 மணிக்கு படுத்தேன் என்றால், சரியாக அதிகாலை 4 மணிக்குத்தான் கண்விழிக்கிறேன். என் மனபாரங்கள் அனைத்தும் நீங்கி மிக லேசாக உணர்கிறேன். ஆண்டவருக்கு கோடி ஸ்தோத்திரம்.

சகோதரி மெர்சி - சென்னை, ஜூலை 16, 2015:

கடந்த 3 வருடங்களாக வயிற்றுவலியினால் அவதிப்பட்டு வந்தேன். பார்க்காத மருத்துவர்கள் இல்லை. டாக்டர்கள் வெவ்வேறு வலி நிவாரணி மாத்திரைகளை 5 நாட்களுக்கு கொடுப்பார்கள். இப்படியேதான் என் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்களை செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயத்தில் பார்த்தேன். என் தலையில் கைவைத்து ஜெபித்துவிட்டு, “உனக்கு ஒன்றும் இல்லை; நீ தியானத்தில் கலந்துகொள்; சரியாகிவிடுவாய்” என்றார்கள். சென்ற மாத தியானத்தில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் இந்த மாதத்துக்கு பதிவு செய்து வந்தேன். முதலில் எனக்கு வலி குணமாகும் என்ற நம்பிக்கையில்லை.

ஆனால் அபிஷேக ஆராதனை நிகழ்வில், என்னால் ஆண்டவரின் ஆசீர்வாதத்தை முழுவதுமாக உணர முடிந்தது. அந்த நொடி முதல் என் வலியும் நின்றுவிட்டது. மதியம்கூட மீன் சாப்பிட்டேன்.

எனக்கு ஏகப்பட்ட உள்மனக் காயங்கள். என் மனதின் ரணத்தை இயேசாண்டவர் அற்புதமாக குணப்படுத்தினார். மேலும் எனக்கு உடலிலும் பல காயங்கள்; அனைத்தும் விபத்துக்கள் மூலம் ஏற்பட்டவை.

என்னுடைய அனைத்து வலிகளையும் கடவுள் நீக்கி அதிசயம் புரிந்துள்ளார். நான் வயிற்றுவலி குணமாவதற்காகத்தான் வந்தேன். ஆனால் இறைவன் என்னை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார் என்பதை பரிபூரணமாக உணர்கிறேன். இயேசப்பாவுக்கு கோடி நன்றி.

சகோதரி ரம்யா - எடப்பாடி, ஜூலை 16, 2015:

ஒரு வருடத்துக்கு முன்பிருந்து எனக்கு அடிக்கடி மயக்கம் வந்து கீழே விழுந்துவிடுவேன். எனக்கு ஒரு கையும், ஒரு காலும் விளங்காமல் போய்விட்டது. நான் படும் கஷ்டங்களைப் பார்த்து என் 2 வயது மகளும் எதுவுமே சாப்பிடாமல் அழுது அழுது இளைத்துப் போய்விட்டாள். எனக்கு இரவில் தூக்கமும் வராது. மிகுந்த மனக்கஷ்டத்தினால் அவதிப்பட்டேன். சேலத்திலிருந்து ஒரு அண்ணன் அவர்கள்தான், “நீ கார்மேல் ஆசிரமத்துக்குப் போ. உனக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னார்கள். நானும் சனிக்கிழமை பகல் தியானத்துக்கு கடந்த மாதம் வந்தேன். நான் இங்கு வந்து சென்றதிலிருந்து என் பிரச்னைகள் எல்லாம் குறைய ஆரம்பித்தன. எனக்கு அப்போதிருந்தே மயக்கம் வருவதில்லை. என் குழந்தையும் நன்றாக சாப்பிட ஆரம்பித்துவிட்டாள். உடனே நான் இந்த தியானத்துக்கு பதிவு செய்தேன்.

ஒரு வருடத்துக்குப் பிறகு இங்கு வந்த பிறகுதான் நான் இரவில் தூங்கியிருக்கிறேன். இரவு சாப்பிட்டுவிட்டு போய் படுப்பதுதான் தெரியும். நான் எழுந்தால் காலை 5 மணியாகி இருக்கிறது. என்னை அழைத்து சௌக்கியம் கொடுத்த என் இயேசாண்டவருக்கு கோடி நன்றி.

சகோதரர் லூக்காஸ் - விழுப்புரம், ஜூலை 16, 2015:

நான் 3 வேளையும் சாப்பிட்டு, இரவுகளில் தூங்கி 2 வருடங்கள் ஆகின்றன. உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். எனக்கு வாழ்க்கையே அவ்வளவுதான் என்று ஆகிவிட்டது. அதற்குக் காரணம், 2 வருடங்களுக்கு முன் என் அண்ணன் திடீரென்று இறந்துவிட்டார். அந்த சோகம் நீங்கும் முன்பே என் மனைவி இறந்துவிட்டார். சில நாட்களில், எனக்கு எல்லாமாக இருந்த என் தாயாரும் திடீரென்று இறந்துவிட்டார்கள். எனக்கு உலகமே சூன்யமாகிவிட்டது. எப்போதாவது நினைத்தால் சாப்பிடுவேன். இரவில் டி.வியின் முன் உட்கார்ந்து எல்லா சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருப்பேன். தூக்கம் என்பதே கிடையாது.

என் அக்கா ஒருவர் சலேஷியன் சிஸ்டராக உள்ளார்கள். அவர்கள்தான் என்னை “தர்மபுரி ஆசிரமத்துக்கு வா” என்று கூப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். பதிவு செய்து இந்த மாதம் வந்தேன். என் மனபாரத்துக்கு ஒரு அளவே இல்லை. முதல் நாளே அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள், “சாப்பிடும்போது ஒரு கறிவேப்பிலை இலையைக்கூட வீணாக்கக்கூடாது” என்று சொன்னார்கள். பல்லைக் கடித்துக்கொண்டு, வாங்கிய உணவை சாப்பிட்டு முடித்தேன். மறுநாள் காலையிலிருந்து நான் 2 முறை வாங்கி சாப்பிடுகிறேன். அதிசயம். அதுபோல் முதல் 2 நாட்கள் எனக்கு அவ்வளவாக தூக்கம் வரவில்லை. நேற்று இரவு நன்றாக தூங்கினேன். இன்றும் நன்றாகத் தூங்குவேன் என்று நம்புகிறேன்.

கடவுள் என்னைத் தொட்டு ஆசீர்வதித்து இருக்கிறார் என்று முழுமையாக உணர்கிறேன். என்னைப் போல், ஏன் என்னைவிட மோசமான நிலையில் இருப்பவர்கள் எத்தனையோ மனிதர்கள் இந்த உலகில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் இந்த கார்மேல் ஆசிரமத்துக்கு வரவேண்டும். இயேசாண்டவரை முழுமையாக அனுபவிக்க இதைவிட ஒரு சிறந்த இடம் இருக்காது என்று நம்புகிறேன். இந்த ஆசிரமத்தின் பெயர் உலகம் முழுவதும் தெரியவேண்டும். அதற்காக என்னால் முடிந்த அளவு நான் முயற்சிக்கிறேன்.

சகோதரர் ஃபெலிக்ஸ் - பெரம்பலூர், ஜூலை 16, 2015:

நானும் என் மனைவியும் ஆசிரியர்களாக இருக்கிறோம். எங்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆனதை கடந்த மாதம் கொண்டாடினோம். அந்த நிகழ்வின்போது என்னுடைய மைத்துனரும் மைத்துனியும் எங்களுக்குக் கொடுத்த பரிசுதான், நாங்கள் இந்த தியானத்தில் கலந்துகொள்வதற்காக பணம் கட்டிய ரசீது. உண்மையில் இதை நான் யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியமாகத்தான் பார்க்கிறேன். கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் என் கால் முழங்காலில் அடிபட்டதில் இருந்து என்னால் முட்டியிட முடிவதில்லை. அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள், 2ஆம் நாள் ஆராதனையின்போது, “முழங்கால் வலியிலிருந்து கடவுள் ஒருவரை குணப்படுத்துகிறார்” என்றார்கள். அன்றிலிருந்து எனக்கு முட்டியில் வலியே இல்லை. தற்போதுகூட நான் முட்டியிட்டுத்தான் வந்தேன்.

அடுத்ததாக, எனக்கு பைபிளில் வசனங்களை அந்தளவு வேகமாக எடுக்கத் தெரியாது. முதல் நாள் என்னால் வசனங்களை வேகமாக எடுக்க முடியவில்லை. “மற்றவர்களைப்போல் நானும் வசனங்களை வேகமாக எடுக்கவேண்டும்” என்று வேண்டுதல் வைத்தேன். கடவுள் அந்த வரத்தை எனக்கு அளித்தார். நன்றி இயேசுவே.

கடைசியாக, என்னுடைய மகன்களுக்கும், மனைவிக்கும் வருங்காலத்தில் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டு, கடவுளுக்கு சித்தமானால், அருட்தந்தை அவர்கள் அனுமதித்தால், இங்கு வந்து ஊழியம் புரிவேன் என்று இந்த புனிதமான பீடத்தின் முன்பாகக் கூறிக்கொள்கிறேன். இயேசுவுக்கே நன்றி, இயேசுவுக்கே புகழ்.