Testimonies - 2015 June Retreat (Laity)

சாட்சியங்கள் - 2015 ஜூன் மாத தியானம் (பொதுமக்கள்)
பீட்டர் - மூணார், வெள்ளி ஜூன் 12, 2015:

எனக்கு இந்த தியானத்தில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் என்மேல் இறங்கி வந்ததை நான் நன்கு உணர்ந்தேன். என் மேல் தண்ணீர் துளிகள் மேலிருந்து சொட்டிக் கொண்டு இருந்தபோது முதலில் அவிசுவாசமாக உணர்ந்தேன். ஆனால் அது தொடர்ந்து என்மேல் விழுந்துகொண்டு இருந்தபோதுதான் அது பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் என்மேல் இறங்கி வருவதை முழுமையாக உணர்ந்தேன். கடவுளுக்கு ஸ்தோத்திரம்.

இதுபோல இத்தனை மக்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுவது என்பது என்னால் முடியாத காரியம். இப்போது உங்களை நான் பார்த்து பேசுவதே பரிசுத்த ஆவியானவரின் வல்ல செயல்தான். மேலும் கவுன்சிலிங் நிகழ்வில் நான் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு வெளிப்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி. அல்லேலூயா.

பிஜூ - மூணார், வெள்ளி ஜூன் 12, 2015:

நான் இந்த தியானத்திற்கு வரும்போது தலையே வெடித்துவிடுவது போன்ற தலைவலியுடன் வந்தேன். அத்துடன் எனக்கு கழுத்துவலியும் உண்டு. அத்தோடு நாற்காலி, சோஃபா போன்றவற்றில் உட்கார்ந்து எழுந்தால் எனக்கு வயிற்றுப்பகுதியில் பிடித்துக்கொண்டு வலியால் அவதியுறுவேன்.

பொதுவாக ஒரு கல்லில் 2 மாங்காய் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கடவுள் எனக்கு தலைவலி, கழுத்துவலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு வலி என்று அனைத்து வலிகளிலிருந்து எனக்கு ஆண்டவர் விடுதலை கொடுத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி..

ஜோஸஃப் இஸ்ரயேல் - மும்பை, வெள்ளி ஜூன் 12, 2015:

பல கஷ்டங்களுக்கு இடையே நான் இந்த தியானத்திற்கு என் மனைவியுடன் மும்பையிலிருந்து வந்துள்ளேன். நான் இந்த தியானத்திற்கு வந்தபோது முதுகுப்பிடிப்பால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். இரயிலில் வரும்போதுகூட மிகவும் கஷ்டப்பட்டேன். கடவுளே, இந்த வலியிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என்று வேண்டிக்கொண்டுதான் ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.

2ஆம் நாள் தியானத்தில் அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் “ஜோஸஃப் என்ற சகோதரனை கடவுள் தொடுகிறார்” என்று சொன்னார்கள். உண்மையிலே சொல்கிறேன். அந்த வினாடியே, அந்த வலி என்னிடமிருந்து மறைந்தது. அந்த நொடியிலிருந்தே நான் பூரண சுகம் பெற்றேன். இயேசுக்கே நன்றி.

ஜெனித்தா - கந்திக்குப்பம், வெள்ளி ஜூன் 12, 2015:

நான் இன்ஜினியரிங் 3ஆம் ஆண்டு படித்துக்கொண்டுள்ளேன். எனக்கு கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து வயிற்றுவலி ஏற்படும். வலி வந்துவிட்டால், என்னால் ஒருஅடிகூட எடுத்துவைக்க முடியாது. காலை அசைக்கவே முடியாது. கல்லூரியில் வலி வந்துவிட்டால், என்னால் 1 மணி நேரம்கூட இருக்கமுடியாது. உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுவேன். இங்கு வரும்போதுகூட எனக்கு வயிற்றுவலி இருந்தது. ஆனால் ஆராதனையிலும் சரி, மற்ற எல்லா இறைபுகழ்ச்சி நிகழ்வுகளிலும் சரி, மற்றவர்களைப் போலவே நான் நன்றாகவே நடனமாடினேன். எனக்கு எந்த வலியும் இல்லை.

அதேபோல், கடந்த ஒரு வருடமாகவே நான் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தேன். இந்த 5 நாட்களாக எனக்கு தலைவலியும் முழுவதுமாக குணமாகிவிட்டது. குளிர்ந்த நீரை நான் பயன்படுத்தவே மாட்டேன். ஆனால், கடந்த 5 நாட்களாக நான் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, குளிர்ந்த நீரில்தான் குளித்தேன். குடித்தேன். எனக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. என்னை எல்லாவிதத்திலும் சுகமாக்கிய கடவுளுக்கு ஸ்தோத்திரம்.

ஜெஸ்சி - சேலம், வெள்ளி ஜூன் 12, 2015:

எனக்கு வீசிங் (மூச்சிரைப்பு) நோயானது சிறுவயதில் இருந்தே இருக்கிறது. பச்சை தண்ணீரையே பயன்படுத்தமாட்டேன். ஒருவேளை தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்துவிட்டால், உடனே வீசிங் வந்துவிடும். மூக்கில் இருந்து நீர் ஒழுக ஆரம்பித்துவிடும். கையில் எப்போதும் நிறைய பேப்பர் நாப்கின்கள் வைத்துக்கொண்டு இருப்பேன். மாத்திரை போட்டு, பஃப் அடித்து, 2 மணி நேரம் கழித்துத்தான் ஓரளவு சாதாரண நிலைக்கு வரமுடியும்.

நான் தியானத்துக்கு வந்தவுடனே, ஹீட்டர் எதுவும் இருக்கிறதா என்று, குளியல் அறைக்குத்தான் சென்று பார்த்தேன். ஆனால் எதுவும் இல்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த 5 நாட்களும் எப்படி கஷ்டப்பட போகிறேனோ என்று ஒரு பயம் வந்துவிட்டது. முதல் நாள் காலை 5 மணிக்கு எழுந்து பச்சை தண்ணீரில் குளிக்கும்போது, இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லிக்கொண்டுதான் தண்ணீரை ஊற்றினேன். என்ன அதிசயம்! வந்த நாளில் இருந்து, எனக்கு எந்த வீசிங் தொந்தரவோ, தும்மலோ, சளியோ எதுவுமே இல்லை.

அத்தோடு, என் அம்மா இறந்த நாளிலிருந்து கடந்த 90 நாட்களாக நான் தூங்கவே இல்லை. லேட்டாக படுத்தாலும், சரியாக அதிகாலை 2 மணிக்கெல்லாம் விழித்து விடுவேன். அதன்பிறகு என்னால் தூங்கவே முடியாது. நான் இங்கு வந்த பிறகு, 10 மணிக்கு படுத்தேன் என்றால், நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியாத அளவுக்கு தூங்க வைத்து, காலை எழுப்பும்போது அதற்குள்ளாகவா காலை 5 மணியாகிவிட்டது என்று நானே ஏங்கும் அளவிற்கு தூக்கத்தைக் கொடுத்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி.

கிருபா ராணி - சேலம், வெள்ளி ஜூன் 12, 2015:

எனக்கு 2010ஆம் ஆண்டில் இருந்து, ஒரு நாளில் தூங்கும் நேரத்தைத் தவிர குறைந்தபட்சம் 40-50 முறை ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துவிட்டோம். ஒரு பயனும் இல்லை. என்னுடைய அம்மா, மாதத்தில் முதல் சனிக்கிழமைகளில் நடைபெறும் எல்லா தியானத்துக்கும் இங்கு வருவார்கள். அம்மாதான் சொன்னார்கள், “உள்ளிருப்பு தியானத்தில் கலந்துகொள்; கடவுள் உனக்கு விடுதலையைக் கொடுப்பார்” என்று. நானும் வந்தேன். என்ன ஆச்சரியம்! நான் வந்த நாள் முதல் எனக்கு ஏப்பமே வரவில்லை. இன்று காலைதான் எனக்கே தோன்றியது, நமக்கு தினமும் ஏப்பம் வந்துகொண்டே இருக்குமே என்று. என்னை சுகப்படுத்திய தேவனுக்கு கோடான கோடி நன்றி.

ப்ரின்ஸி - ஜெயங்கொண்டம், வெள்ளி ஜூன் 12, 2015:

நான் இங்கு தியானத்துக்கு வந்தபோது எல்லோரையும்போல ஒரு சாதாரணப் பெண்ணாகத்தான் வந்தேன். ஆனால் பாவசங்கீர்த்தன வகுப்பு முடிந்தபிறகுதான், நான் எவ்வளவு பெரிய பாவியாக இருந்திருக்கிறேன் என்று உணர்ந்தேன். ஒரு மிகச் சிறந்த பாவசங்கீர்த்தனம் செய்தேன். கடவுள் என்னை தூய்மைப்படுத்தி, பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்கிற அளவுக்கு என்னை ஆசிர்வதித்து இருக்கிறார்.

என்னுள் ஏற்பட்டிருக்கும் மனமாற்றம், எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கே, பெரிய ஆச்சரியமாக இருக்கும். நானே ஒரு மிகப்பெரிய சாட்சியமாக நின்று, எங்கள் ஊரில் இருந்து எண்ணற்ற மக்களை, இந்த தியான மையத்துக்கு மனமாற்றத்துக்காக அனுப்பி வைப்பேன் என்று இந்த சாட்சியத்தில் உறுதி கூறுகிறேன். அல்லேலூயா.

அமல சுதா - சிங்கப்பூர், வெள்ளி ஜூன் 12, 2015:

நான் சிங்கப்பூரில் ஒரு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். என்னுடைய சகோதரர் ஏற்கனவே இந்த தியான மையத்தைப் பற்றி கேள்விப்பட்டு தியானத்தில் கலந்துகொண்டு இருக்கிறார். என்னிடமும் கலந்துகொள்ளச் சொன்னார். நானும் எனக்கு விடுமுறை கிடைக்கும்போது வந்து கலந்துகொள்கிறேன் என்று சொன்னேன். இந்த மாதம் விடுமுறை கிடைத்தது. நானும் என் உறவினர்கள் வீட்டிற்கெல்லாம் போகவேண்டுமே, நேரம் கிடைக்குமா, என்று பயந்துகொண்டிருந்தேன். பிறகு எப்படியும் தியானத்தில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்று முடிவுசெய்து வந்துவிட்டேன்.

எனக்கு இங்கு கிடைத்த முதல் அபிஷேகம், நல்ல பாவசங்கீர்த்தனம் மூலமாக கடவுள் கொடுத்தார். 2ஆவது அபிஷேகம், கவுன்சிலிங் நிகழ்வில் சகோதரி மூலமாக கடவுள் எனக்குக் கொடுத்தார். நான் இங்கு வரும்போது, எனக்கு உடல் முழுவதும் வலி; மனதிலும் அதிக வலி, என்று மிகவும் பாரத்தோடுதான் வந்தேன். கடவுள் என்னை ஆசிர்வதித்து, என் உடல், மன பாரங்கள் அனைத்தையும் நீக்கிக் கொடுத்துள்ளார். மிகவும் சந்தோஷமாக உள்ளேன். நான் பெற்ற, மற்றும் இங்கு கண்ட அதிசயங்களை, சிங்கப்பூரில் உள்ள நம் தமிழ் மக்களும் பெற, என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளும் செய்து, அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்களை, விரைவில் சிங்கப்பூரில் சந்திப்பேன் என்று இந்த சாட்சியத்தில் நான் உறுதி கூறுகிறேன். அல்லேலூயா.

கார்ட்டர் ஆரோக்கியராஜ் - கோவை, வெள்ளி ஜூன் 12, 2015:

நான் ஒரு தமிழாசியராக பணிபுரிகிறேன். எனக்கு வெகுநாட்களாகவே முதுகுவலி இருக்கிறது. நான் இங்கு வரும்போது ஒரு வறண்ட பாலைவனமாக வந்தேன். இரயிலில் பயணித்துக் கொண்டு இருந்தபோது சேலத்தை தாண்டியதும், மலையும் அதை சார்ந்த பகுதியும் வந்தது. அப்போது எனக்கு குறிஞ்சி நிலத்தைக் கடக்கிறோம் என்ற உணர்வு வந்தது. அதைத் தாண்டியதும், காடும் அதை சார்ந்த பகுதியும் வந்தது, எனக்கு முல்லை நிலத்தை நினைவூட்டியது. ஆசிரமத்திலே நுழைந்ததும் அதன் பசுமையான சூழ்நிலை, எனக்கு மருத நிலத்தை நினைவூட்டியது.

இங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வும், என்னை ஒரு பக்திப் பரவசக் கடலில் மிதக்க வைத்து, நெய்தல் நிலத்தையும் எனக்குக் காட்டியது.

பாலைவனமாக வந்த என்னை, எல்லா நிலங்களிலும் பயணிக்க வைத்து, எந்த நோக்கத்தோடு நான் இந்த தியானத்துக்கு கலந்துகொள்ள வந்தேனோ, அவை அனைத்தையும் எனக்கு நிறைவேற்றிக் கொடுத்து, பரிசுத்த ஆவியின் அபிஷேக மழையருவியாகப் பொழிந்து, பாலையை முல்லையாக மாற்றிய தேவனுக்கு கோடான கோடி நன்றி. அருட்தந்தை அவர்களுக்கும் நன்றி.