Testimonies - 2015 May Retreat-2 (Laity)

சாட்சியங்கள் - 2015 மே மாத தியானம்-2 (பொதுமக்கள்)
செல்வி. ஜெசினா - சேலம், வெள்ளி மே 15, 2015:

எனக்குக் கடுமையான இரத்தப்போக்கு பிரச்னை இருந்து வந்தது. அத்துடன் வயிற்றுவலியும் இருக்கும். நான் தியானத்தின்போது அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்களிடம் என் பிரச்னைகளை சொன்னேன். அவர்கள், நான் பலரிடமும் மனஸ்தாபம் கொண்டிருப்பதால்தான் எனக்கு இந்தப் பிரச்னை என்று சொன்னார். நான் யார் யாரிடமெல்லாம் மனஸ்தாபம் கொண்டிருந்தாலும், அவர்களை உடனே முழுவதுமாக மன்னிக்க சொன்னார். நானும் இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு அவர்களை மன்னித்தேன். என்ன ஆச்சரியம்; என் இரத்தப்போக்கும் வயிற்றுவலியும் உடனே நின்றது. அதிசயங்களும் அற்புதங்களும் செய்யும் இயேசு நாமம் வாழ்க.

திருமதி. மேரி சில்வெஸ்தியா - பெங்களூரு, வெள்ளி மே 15, 2015:

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நான் இதே தியானத்துக்கு வந்திருந்தேன். மன பாரங்கள், சுமைகள், குழந்தையைப் பற்றிய கவலைகளுடன் வந்தேன். தியானம் முடிந்து சென்றபோது பல விடுதலைகளை கடவுள் கொடுத்திருந்தார். என்னுடைய குழந்தையை நானே வளர்க்கும் சூழ்நிலையில், அவள் உள்மனக்காயங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். புதிதாக யாரைப் பார்த்தாலும் உடனே கோபமாக சப்தம் போடுவாள், அழுவாள். இதற்கு பயந்துகொண்டே அவளை எங்கும் அழைத்து செல்லமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். கடந்தமுறை நான் தியானத்துக்கு வந்தபோது என்னுடன் தியானத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், இங்குள்ள ஊழியக்காரர்களுக்கும் இதுபற்றித் தெரியும்.

ஆனால் இந்தமுறை நான் தியானத்துக்கு வந்தபோது, என்னுடைய பெண் மிகவும் அமைதியாக எல்லோருடனும் சிரிப்பதையும் அமைதியாகப் பழகுவதையும் பார்க்கும்போது, இது ஒரு புண்ணியபூமி என்பதை நான் உணர்கிறேன். என்னுடைய மனப்பாரங்களும் இறங்கிப்போனதை நான் மனதார உணர்கிறேன். இயேசு நாமம் வாழ்க.

திரு. ஜெரால்டு ஜோசஃப் - சென்னை, வெள்ளி மே 15, 2015:

பல வருடங்களாக முதுகு தண்டுவட வலியினால் கடும் அவதியுற்று வந்தேன். என்னால் கீழே உட்கார முடியாது. அதேபோல் என்னால் முன்னாலோ பின்னாலோ வளைய முடியாது. ஆனால் கடந்த புதன்கிழமை முதல், நான் தரையில்தான் உட்காருகிறேன்; முழங்காலில் இருக்கிறேன்; ஆராதனை நேரங்களில் பாடி ஆடுகிறேன். எனக்கு எந்த குறையும் இல்லை. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

அடுத்து எனக்கு தீவிரமான பய உணர்வு இருந்தது; எதற்கெடுத்தாலும் பயப்படுவேன். வாழ்க்கையை நினைத்தால் பயம்; என் பிள்ளைகளை நினைத்தால் பயம்; என் அலுவலகத்தை நினைத்தால் பயம்; வண்டி ஓட்டுவது என்றால் பயம். இப்படி நான் நினைத்து பயப்படாதது எதுவுமே இல்லை.

என் ஆண்டவர் இயேசு செய்த மாயம், அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் ஆராதனை நேரத்தில் சொன்னார்கள் - ஒருவருக்கு பய உணர்ச்சியை கடவுள் நீக்கித் தருகிறார் என்று. நேற்றிலிருந்து அந்த பய உணர்ச்சியானது முற்றிலுமாக என்னைவிட்டு நீங்கியது, எனக்கே ஆச்சரியமாக உள்ளது.