Testimonies - 2015 May Retreat-1 (Laity)

சாட்சியங்கள் - 2015 மே மாத தியானம்-1 (பொதுமக்கள்)
திருமதி. கிறிஸ்டினா - சேலம், வெள்ளி மே 8, 2015:

எனக்கு இது இரண்டாவது தியானம். ஆறு மாதங்களுக்கு முன்பு நானும் என் கணவரும் இங்கு வந்தபோது நாங்கள் இருந்த நிலைமை உங்களுக்குத் தெரியாது. என் கணவர் செய்த வியாபாரத்தில் ரூபாய் 10 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. கடன்காரர்கள் எங்கள் வீடுதேடி வந்து மிரட்ட ஆரம்பித்தார்கள். அந்த சூழ்நிலையில்தான் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இந்த தியான மையத்துக்கு வந்தோம். எங்கள் மனக்குறைகளை கடவுளிடம் சொல்லி அழுதோம். அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்களை சந்தித்து எங்கள் பிரச்னைகளை சொன்னோம். அவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்வதாகக் கூறினார். எங்களையும் இடைவிடாது ஜெபிக்க சொன்னார். எக்காரணம் கொண்டும் ஜெபிப்பதை மட்டும் விட்டுவிடக்கூடாது என்றார். குறிப்பாக, இறை இரக்கத்தின் ஜெபமாலையை சொல்லச் சொன்னார்.

நாங்கள் தியானத்திற்கு வரும்முன் எங்களுக்குள்ளே ஒரு முடிவு செய்துவிட்டுத்தான் கிளம்பினோம். அதாவது, தியானத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையென்றால், திரும்பிவந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வது என்பதுதான் அது. ஆனால், தியானத்தில் அருட்தந்தை சொன்ன ஆறுதல் வார்த்தைகளும், அவரது ஜெபமும், எங்கள் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது.

நாங்கள் வீடு திரும்பிய பின், திரும்பவும் கடன்காரர்கள் வந்து சென்றார்கள். அருட்தந்தையிடம் தொலைபேசி மூலம் தகவல் சொன்னோம். அவர், “நான் ஜெபிக்கிறேன்; நீங்களும் ஜெபிப்பதை நிறுத்தாதீர்கள்” என்றார். ஒருசில நாட்களில், வீடுதேடி கடன்காரர்கள் வருவது நின்றது. நாங்களும் எங்கள் கடனை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருகிறோம்.

அதேபோல் சென்ற தியானத்தில் தசமபாகத்தைப் பற்றி அருட்தந்தை சொன்னபோது, அது எனக்குப் புதுமையாக இருந்தது. ஏனெனில், எந்த அருட்தந்தையரும் இதுவரை இதைப்பற்றி எங்களது பங்கில் கூறியதில்லை. அது நமது கடமையாக இருக்கிறது என்று தெரிந்தபின், நாங்கள் அதை அருட்தந்தைக்கு கொடுக்க ஆரம்பித்தோம். முதல் மாதத்தில் தசமபாகமாக ரூபாய் 1,500 கொடுத்தோம். இந்த மாதம் ரூபாய் 7,600 கொடுத்தோம். 6 மாதத்திற்குள் கடவுள் எங்களது பொருளாதாரத்தை முன்னேற்றி வருகிறார் என்பதற்கு இதுவே உதாரணம். இயேசுவே போற்றி.

திரு. சவரிநாதன் - ஜெயங்கொண்டம், வெள்ளி மே 8, 2015:

கடந்த 35 ஆண்டுகளாக அல்சர் வியாதியால் அவதியுற்று வந்தேன். அத்தோடு வாயுத்தொல்லையும் தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தும். என்னால் தயிர் சாதத்தைத் தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாது. இரவில் சாப்பிட்டுவிட்டு படுத்தால் 10 நிமிடங்களில் வாயு உருவாகி என் தொண்டையை அடைக்கும். மூச்சுவிட முடியாமல், “ஏசப்பா, என்னை காப்பத்துங்க...” என்று கத்துவேன். என்ன வைத்தியம் பார்த்தும் ஒன்றும் குணமாகவில்லை. படுத்தால் அதிகாலை 2 மணி வரை தூக்கம் வராது. அத்துடன் வெகுநாட்களுக்கு முன் என்னுடைய வலதுகை மூட்டு நழுவிவிட்டது. அதன்பின் சிறியதாக ஏதாவது தூக்கினால்கூட அது மீண்டும் நழுவிவிடும். என்னால் வலியை தாங்கமுடியாது. என்னோடு சேர்ந்து என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் துடிப்பார்கள்.

நான் இந்த தியானத்திற்கு வந்த முதல் நாளே, கார்மேல் அன்னையிடம் மண்டியிட்டு அழுது ஜெபித்தேன். “மாதாவே, நான் இந்த ஆசிரமத்தைவிட்டு செல்லும்போது, முற்றிலுமாக குணமாகி செல்ல எனக்காக உமது திருமகனிடம் பரிந்து பேசும் அம்மா” என்று வேண்டிக்கொண்டுதான் என் தியானத்தை ஆரம்பித்தேன். என்ன அதிசயம்...! கடந்த 4 நாட்களாக, நான் இங்கு வழங்கப்படும் எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறேன். கோழிக்கறியைக்கூட ஒருபிடி பிடித்தேன். தோசை, பூரி என்று எல்லா உணவுகளையும் சாப்பிட்டேன். எனக்கு எந்த வலியும் வயிற்றில் ஏற்படவில்லை. இரவில் வாயுத்தொல்லையும் இல்லை. வந்த நாள் முதல் நன்றாக உறங்கினேன். என்னால் எந்தப் பொருளையும் தூக்கமுடிகிறது. எனக்கு 4 புதுமைகளை செய்த கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். இந்த ஆசிரமம் உண்மையிலேயே ஒரு புண்ணிய பூமியாக விளங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருமதி. அக்சீலியா ஜோ - நாகர்கோவில், வெள்ளி மே 8, 2015:

நான் இங்கு வரும்வரை ஜெபமாலை சொல்வதில் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை. ஜெபமாலையின் அருமை பெருமைகளை அறியாமல் இருந்தேன். அருட்தந்தை ஜெயின் அவர்கள் எடுத்த வகுப்பின் மூலமாக அதன் வல்லமையை அறிந்துகொண்டேன். நான் வரும்போது மிகுந்த மனபாரத்தோடும் முதுகு தண்டுவட வலியோடும்தான் வந்தேன்.

என் வாழ்க்கையிலே செய்திராத ஒரு பாவசங்கீர்த்தனத்தை நான் இங்கு செய்தேன். அதன் பிறகு நான் என்னுள்ளே நிறைய மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். கவுன்சிலிங் நிகழ்வில் சகோதர என்னை பற்றி ஏராளமாக சொன்னார். என்னுடைய முதுகுவலி முதல் அனைத்தும் சொன்னார்.

என்னுடைய பாவ சாப கட்டுகளிலிருந்து எனக்கு ஜெபம் செய்து விடுதலை அளித்தார். நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக தற்போது உள்ளேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடவுள் என்பால் அதிக அன்பாய் இருக்கிறார் என்பதை நான் இங்கு வந்த பிறகுதான் உணர முடிந்தது. இயேசுவுக்கே ஸ்தோத்திரம்.