Testimonies - 2015 February Retreat (Lay People)

சாட்சியங்கள் - 2015 ஃபிப்ரவரி மாத தியானம் (பொதுமக்கள்)
சுவர்ணலக்ஷ்மி - சேலம், வெள்ளி ஃபிப்ரவரி 13, 2015:

நான் ஐ-யா-டா விமான டிக்கெட் பதிவுப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் ஒர் நேர்முகத்தேர்வை கடந்த வாரம் முடித்தேன். ஆனல் அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் சரியாக பதில் கூறவில்லை. இருந்தாலும் எனக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அங்கு சரியாக பதில் சொல்லாததால் இந்த மாதம் வேறு ஒரு கம்பெனி இன்டர்வியூவுக்கு சென்றுவிட்டு அடுத்த மாதம் தியானத்துக்கு வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் அம்மா, “இந்த மாதமே தியானத்துக்கு செல்; எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொன்னார்கள்.

அம்மா சொல்கிறார்களே, சரி என்று வந்துவிட்டேன். நான் ஆட்டோவில் வந்து ஆசிரமத்தில் இறங்கிப் பார்த்தால், என் மொபைலில் 3 மிஸ்டு-கால்கள் இருந்தன. எந்த வேலை வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ, அதே வேலை எனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்திலிருந்தே கூப்பிட்டிருந்தார்கள். தியானத்துக்கு உள்ளே நுழையுமுன்னே என்னை ஆசிர்வதித்த இயேசாண்டவருக்கு நன்றி.

விக்டோரியா - தர்மபுரி, வெள்ளி ஃபிப்ரவரி 13, 2015:

எனக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஒற்றை தலைவலி இருந்தது. ஆராதனை நேரத்திலே அருட்தந்தை அவர்கள், “ஒற்றைத் தலைவலி உள்ள ஒருவரை, கடவுள் தொட்டு சுகப்படுத்துகிறார்” என்று கூறினார்கள். அந்த வினாடியில் இருந்து என் தலைவலி என்னை விட்டு நீங்கியது. கடவுளுக்கு நன்றி. எனக்கு உடல் முழுவதும் பல நோய்கள் இருந்தன. கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலி, என்று பல நோய்கள். நான் இங்கு வரும்போதெல்லாம் எனக்கு ஒவ்வொரு முறையும் கடவுள் ஒவ்வொரு வலியாக குணப்படுத்திக்கொண்டே இருக்கிறார். எனக்குக் கடவுள் செய்தவைகளுக்கு நன்றி கூற ஆரம்பித்தால், ஒரு நாள் போதாது. இயேசு ராஜாவுக்கு நன்றி, நன்றி.

ஃபிரான்சிஸ் போர்ஜியோ - நாமக்கல், வெள்ளி ஃபிப்ரவரி 13, 2015:

நான் இங்கிலாந்தில் வேலைபார்த்துத் திரும்பியுள்ளேன். எனக்கு மீண்டும் விசா கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், மனது திசைமாறியது. நான் இந்த தியானத்துக்கு வந்தபோதே என்ன நிலையில் வந்தேன் என்று ஒருசிலருக்குத் தெரியும். ஆம், நன்றாகக் குடித்துவிட்டுத்தான் வந்தேன். எனக்கே ஒரு கேவலமான நிலை. கீழே விழுந்து காலில் அடி பட்டிருக்கிறது. அதனால்தான் வந்ததில் இருந்து நொண்டி நடக்கிறேன். ஆனால் உண்மையில் சொல்கிறேன், இந்த தியானம், என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பம். பாவசங்கீர்த்தனம் முடிந்தபிறகு நான் முடிவு செய்துவிட்டேன். இனி வாழ்க்கையில் ஒருபோதும் குடிக்கமாட்டேன் என்று. நான் வாழ்க்கையில் எவ்வளவோ தவறுகள் செய்துள்ளேன். கடவுள் முன்னிலையில் சத்தியம் செய்திருக்கிறேன். இனி அப்படிப்பட்ட தவறுகளை என் வாழ்க்கையில் ஒருபோதும் செய்வதில்லை என்று. ஒருவேளை வெளிநாடு செல்ல முடியாவிட்டால், சொந்தமாக தொழில் ஒன்று தொடங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள், “ உள்ளம் உருகி ஜெபி; உன் வழியை கடவுள் மாற்றித் தருவார். நீ மீண்டும் வெளிநாடு செல்வாய்” என்றார்கள். கவுன்சிலிங் கொடுத்த சகோதரரும் அதையேதான் கூறினார். உள்ளம் உடைந்தவனாய் ஆண்டவரைத் தேடியிருக்கிறேன். என்னை உருமாற்றிக் கொடுத்த ஆண்டவர் இயேசுவுக்கு கோடி நன்றி.

டெய்ஸி ராணி - மூணார், கேரளா, வெள்ளி ஃபிப்ரவரி 13, 2015:

அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள் எங்களுடைய மூணார் பள்ளிவாசல் பங்குக்கு தியானம் கொடுப்பதற்காக 3 மாதத்துக்கு முன்பு வந்திருந்தார்கள். எனக்கு பரிசுத்த ஆவி என்றாலே அலர்ஜி. நானும் என் தோழிகளும், ஃபாதர் அவர்களையே கிண்டல் செய்திருக்கிறோம். அதன் பிறகு எனக்கே ஒரு வெளிப்பாடு கிடைத்தது. அது தவறு என்று என்னைத் திருத்திக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து தர்மபுரி வந்து தியானத்தில் கலந்து கொள்ளவேண்டுமென்று ஆவலாக இருந்தேன். அதனால் முன்பதிவு செய்து இந்த மாதம் வந்தேன். எங்களுடைய பங்கில் நான் மறைகல்வி வகுப்புகள் எடுப்பேன்; ஆனால் ஏனோதானோவென்றுதான் எடுத்துள்ளேன். இங்கு வந்த பிறகுதான் எனக்கு எல்லாமே விளங்கியது. இல்லற வாழ்க்கையிலேயே இருந்துகொண்டு கடவுளுக்காக வாழ்வது என்று உறுதிபூண்டுள்ளேன். மேலும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அருட்தந்தை அவர்கள் குடும்பக்கட்டுப்பாடு பற்றி வகுப்பு எடுத்தபோது ஆணித்தரமாகக் கூறிய கருத்துக்கள் என் மனதை மிகவும் தொட்டன. உலகில் ஒவ்வொருவரும் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டு எந்தளவு தவறு செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். அந்த தவறை நான் என் வாழ்க்கையில் செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன். கடவுள் எனக்கு எத்தனை குழந்தைச் செல்வங்கள் அளித்தாலும் அவர்களை நான் வளர்ப்பேன். யாருக்காகவும் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிகூறுகிறேன். அல்லேலூயா.