சி.எம்.ஐ சபையின் ஆன்மீக ஆற்றும் மற்றும் புதுப்பிக்கும் இல்லம் @ தருமபுரி சோகத்தூரில்


கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஆற்றும் சேவையில், 12ஆம் வருடத்தில்...

எங்களது ஆசிரமத்தில் உள்ள வசதிகள்

வருடம் முழுவதும் கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால், ஃபோட்டோக்கள் தற்போதைய நிலையை காண்பிக்காமல் இருக்கலாம்.


2008ஆம் ஆண்டு, சி.எம்.ஐ சபை குருக்களால் தருமபுரி - பென்னகரம் - ஹொகேனக்கல் மாநில நெடுஞ்சாலை 60-ல், தருமபுரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், சோகத்தூர் என்ற சிறு கிராமத்தில், 23 ஏக்கர் பரப்பில் துவங்கப்பட்ட எமது தியான ஆசிரமத்தில் நாங்கள் பொதுநிலையினருக்கும், அருட்பணியாளருக்கும் விசுவாச எழுப்புதல் தியான நிகழ்வுகளை வழங்குகிறோம்.

வழிபாடு மற்றும் தியானத்துக்கு உகந்த, இயற்கையோடு ஒன்றிய அமைதியான சூழ்நிலையை வழங்கும் எமது ஆசிரமத்தில்
 • 200 பேர் வரை அமரக்கூடிய கார்மேல் மாதா கோவில்,
 • ஒரு சிறிய ஆராதனை ஆலயம்,
 • 1000 பேருக்கும் மேல் மக்கள் வசதியாக அமரக்கூடிய பெரிய கன்வென்ஷன் அரங்கம்,
 • தியானப் பதிவு செய்யும் கவுண்ட்டர், வழிபாட்டுப் பொருட்கள் கிடைக்கும் ஸ்டால்,
 • ஒரே நேரத்தில் 100 பேருக்கும் மேல் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக சாப்பிடக்கூடிய டைனிங் ஹால்,
 • கட்டில், மெத்தை, தலையணையுடன் கூடிய, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான ஓய்வு அரங்கங்கள்
ஆகியவை உள்ளன. அதிகம் அதிகமான இறை மக்களும், அருட்பணியாளர்களும் எமது தியானங்களில் பங்கு பெற விரும்பும் நிலையில், ஓய்வு அறைகள் மற்றும் கோவிலின் கட்டமைப்பை மேம்படுத்த, இறைவன் சித்தம் செய்ய மன்றாடுங்கள்.


எமது தியான ஆசிரமத்தில், மாதா மாதம் நடைபெறும் நிகழ்வுகளில் முக்கியமானவை:

 • மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று நடைபெறும் முழு-நாள் தியானம் (காலை 9 - மாலை 4).
  சிலுவைப் பாதை, ஜெபமாலை, விடுதலை ஜெபம், பாவசங்கீர்த்தனம், ஆன்மீக செய்தி, தெய்வீகத் திருப்பலி, திவ்விய நற்கருணை ஆராதனை மற்றும் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் என்று வல்லமையாய் நடைபெறும் இந்த தியானத்தில் தமிழகத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும், மக்கள் ஆர்வமாய் கலந்துகொண்டு ஆண்டவர் அவர்கள் மீது பொழியும் இரக்கத்துக்கு சாட்சி கூறுகின்றனர்.

 • மாதத்தின் 2வது மற்றும் 4வது திங்கட்கிழமைகளில் துவங்கும் பொதுநிலையினருக்கான 5-நாள் உள்ளிருப்பு தியானங்கள் (திங்கள் மாலை 3 - வெள்ளி காலை 9).
  தற்போதுள்ள வசதிகளுக்கேற்ப ஒவ்வொரு தியானத்துக்கும் முன்பதிவு மூலம் சுமார் 75 ஆண்கள் மற்றும் 75 பெண்களை மட்டுமே அனுமதிக்க முடிகிறது. ஆயினும் ஒவ்வொரு முறையும், வசதிக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று தங்களையும் அனுமதிக்க வேண்டும் இறைமக்களைக் காணும்போது, மக்களின் வாஞ்சையையும், தேவையையும் அறிய முடிகிறது.

  ஒவ்வொரு தியானத்திலும் மக்கள் மத்தியில் ஆண்டவர் செய்யும் அரும்பெரும் செயல்களுக்கு, இங்கு இதுவரை தியானங்களில் கலந்துகொண்டவர்களும், ஒருமுறை தியானத்தில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் மீண்டும் வர விரும்புவதுமே கண்கூடான சாட்சிகள்.

  பல வருடங்களாகத் தங்களை வேதனைப்படுத்திவந்த எத்தனையோ உடல் உள்ள பிரச்னைகள், தாங்கள் இந்த ஆசிரமத்தில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து தங்களை விட்டு நீங்கியுள்ளதாக மனப்பூர்வமான நன்றியுடன் மக்கள் சாட்சி சொல்வதைக் காணும்போதெல்லாம், நம் ஆண்டவர் இந்த வளாகத்தை எவ்வளவு அபரிமிதமாக ஆசிர்வதித்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

  இங்கு தியானங்கள் நடைபெறும் போதெல்லாம், அந்த தியானங்களில் பங்குபெறும் மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீரவும், அவர்கள் கருத்துக்கள் எல்லாம் நிறைவேறவும், நமது ஆசிரம வளாகத்தில் 3 இடங்களில், திவ்விய நற்கருணையின் பிரசன்னத்தில், எங்களது ஊழியக்கார ஆண்களும் பெண்களும் தனித்தனியாக உருக்கமாய் பரிந்துரை ஜெபங்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

  அத்தகைய சமயங்களில், நீங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே, இதே கருத்துக்களுக்காக பரிந்துரை ஜெபங்களில் ஈடுபட, அன்போடு அழைக்கிறோம்.

 • அருட்கன்னியர்களுக்கான 7-நாள் உள்ளிருப்பு தியானங்கள் (ஞாயிறு - சனி).
  வருடத்தில் 4 முறை நடைபெறும் இந்த ஆழ்ந்த ஜெப தியானங்களில், பொதுநிலையினர் யாருக்கும் அனுமதி இல்லை.

  இந்த தியானங்களில் கலந்துகொண்டு, விசுவாசத்தில் உறுதியும் உற்சாகமும் பெற்று ஆண்டவருக்காய் மட்டுமே இறுதி வரை வாழ உறுதி ஏற்று, விசுவாசத்தில் வீர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அருட்கன்னியர்கள் அனைவருக்காகவும், ஆண்டவரிடம் தினமும் உருக்கமாய் மன்றாடுங்கள்.

 • மாதத்தின் 4வது வெள்ளிக்கிழமை அன்று இரவு நடைபெறும் முழு-இரவு கண்விழிப்பு ஜெபவழிபாடு (இரவு 9 - காலை 5).
  சிலுவைப் பாதை, ஜெபமாலை, விடுதலை ஜெபம், பாவசங்கீர்த்தனம், ஆன்மீக செய்தி, தெய்வீகத் திருப்பலி, ஆசிரமத்தின் உள்ளேயே உள்ள சுற்றுப்பாதையில் திவ்விய நற்கருணை சுற்றுப்பிரகாரம், திவ்விய நற்கருணை ஆராதனை மற்றும் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் என்று வல்லமையாய் நடைபெறும் இந்த தியானத்தில் கலந்துகொள்ள சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், பாண்டிச்சேரியில் இருந்தும் தொடர்ந்து மாதா மாதம் வரும் மக்களும், ஆண்டவர் அவர்களுக்கு செய்துவரும் எண்ணற்ற புதுமைகளுக்காய் அவர்கள் கூறும் சாட்சிகளுமே, விழித்திருந்து ஜெபிக்கும் இம்மக்கள் மீது ஆண்டவர் பொழியும் கிருபைக்கு சான்று.

 • வெளியிடங்களில் நடைபெறும் தியானங்கள் (முன்பதிவு அடிப்படையில் மட்டுமே).
  பங்குக்கோவில்களிலும், அருட்கன்னியர்களின் சபைகளிலும், தியானங்கள் நடத்த பங்குத்தந்தைகள் மற்றும் அருட்கன்னியர்கள் சபைத் தலைவிகளால், பல மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்படுவதால், முடிந்தவரை முன்கூட்டியே அருட்தந்தை ஸ்டீஃபன் அடிகளாரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களது தாழ்மையான ஜெப வேண்டுகோள்

 • நமது பாசமிகு தருமபுரி ஆயர் மேதகு டாக்டர். லாரன்ஸ் பயஸ் ஆண்டகை அவர்களுக்காக:
  இந்த வளாகத்தில் நம் ஆண்டவர் செய்து வரும் எல்லா அரும்பெரும் செயல்களுக்கும் நன்றிகூறும் விதமாக, தனது எத்தனையோ பணிகள் மற்றும் பயணங்களுக்கு மத்தியிலும், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து தெய்வீகத் திருப்பலி நிறைவேற்றி, ஆழமான கருத்துக்களுடன் இறைசெய்தி வழங்கி நம்மை உற்சாகப்படுத்தி வரும், எமது பாசமிகு தருமபுரி ஆயர், மேதகு டாக்டர். லாரன்ஸ் பயஸ் ஆண்டகை அவர்களுக்கு பூரண உடல், உள்ள, ஆன்ம சுகத்தையும், நீண்ட ஆயுளையும் தருமாறும், அவருடைய எல்லா கருத்துக்களையும் நிறைவேற்றவும், அவருடைய எல்லா முயற்சிகளையும் நிறைவாக ஆசீர்வதிக்கவும், நம் ஆண்டவரிடம் தினமும் உருக்கமாக மன்றாடுவோம்.

 • நமது அருமை அருட்தந்தையர்களுக்காக:
  எங்களது ஆசிரமத்தை ஆண்டவரது சித்தத்திற்கேற்ப நடத்திவரும் அருட்தந்தையர்களுக்காக, தினமும் ஜெபியுங்கள்.

  தூரம், வசதி என்று எதையும் பாராமல், கடவுளின் வார்த்தையையே உணவாக, ஓய்வாக, ஆறுதலாக, துணையாகக் கொண்டு, மக்களின் துன்பங்களில் அவர்களை தேற்றுவதையும், அவர்களை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்த்தெடுப்பதையுமே தமது ஒரே குறிக்கோளாகக் கொண்டு, தாங்கள் அழைக்கப்படும் எந்த இடத்துக்கும் சென்று, மறைபரப்பு ஊழியம் செய்துவரும் அவர்களை ஆண்டவர் இன்னும் விசேஷ விதமாய் ஆசீர்வதித்து, அவர்களுக்கு பூரண உடல் உள்ள ஆன்ம சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து, இன்னும் அதிகமதிகமான ஆத்துமங்களை ஆண்டவரோடு இணைக்க, ஆற்றல் மிக்கக் கருவிகளாக அவர்களைப் பயன்படுத்த வேண்டுமென்று உருக்கமாய் மன்றாடுங்கள்.

  மேலும் இந்த ஆசிரமத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் ஆண்டவர் ஆசீர்வதித்து, அவற்றை சிறப்பாக விரைந்து முடிக்கக் கிருபை செய்ய மன்றாடுங்கள்.

 • எங்களது ஆசிரமத்தில் பணியாற்றும் அனைத்து ஆண் பெண் ஊழியக்காரர்களுக்காக:
  மேலும், எங்களது ஆசிரமத்தில் பணியாற்றும் அனைத்து ஆண் பெண் ஊழியக்காரர்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் மன்றாடுங்கள். அவர்கள் செய்யும் ஊழியங்கள் அனைத்தையும் ஆண்டவர் தாமே ஆசீர்வதித்து, ஆன்மீகக் காரியங்களில் அவர்கள் இன்னும் அதிக வல்லமையாய் செயலாற்ற, அவர்களுக்காக விசேஷமாய் ஜெபியுங்கள்.

 • எங்களது அனைத்து உபகாரிகளுக்காக:
  அதுபோல, எங்களைத் தங்களது காணிக்கைகளால் தாங்கும் அனைத்து ஆண்டவரின் பிள்ளைகளுக்காவும் ஜெபியுங்கள். அவர்களை ஆண்டவர் இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்துத் தாங்குமாறு விசேஷமாய் மன்றாடுங்கள்.